உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 மணல் லாரிகளை சிறைபிடித்த இளைஞர்கள்

10 மணல் லாரிகளை சிறைபிடித்த இளைஞர்கள்

அம்பத்துார்:அம்பத்துார் மண்டலம், மங்களபுரம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம், 3,975 சதுர அடியில் கருமா குளம் உள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில், குளத்தை துார் வாரும் பணி, கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள மணலை கொண்டு செல்ல, நேற்று முன்தினம் நள்ளிரவு 10க்கும் மேற்பட்ட லாரிகள் அங்கு வந்தன. இதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், லாரி முழுதும் மணல் நிரப்பும் வரை காத்திருந்தனர்.மணலுடன் லாரி அங்கிருந்து புறப்பட்டபோது, அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, லாரியை மடக்கி சிறைபிடித்தனர். மணல் அள்ளி செல்ல லாரிகளை அழைத்து வந்த நபரையும் பிடித்து விசாரித்தனர்.அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, தர்ம அடி கொடுத்து அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 10 மணல் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரிடம் விசாரித்தனர்.இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: குளத்தில் துார் வாரும் பணிகள் துவங்கியதில் இருந்து, லாரி லாரியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது. லாரியை வரவழைத்து மண் அள்ளிய நபரிடம், உரிய அனுமதி இல்லை; போலி 'பில் புக்' ஒன்றை வைத்திருந்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், இளைஞர்கள் இணைந்து லாரிகளை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளோம்.போலீசாரும், லாரியை வரவழைத்த நபரிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை. மேலும், லாரியை மணலுடன் கொண்டு செல்லாமல், அவற்றை கொட்டிவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த, மணல் கடத்தலுக்கு பின் இருப்பவர்களை, போலீசார் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த நிலையில், அம்பேத்கர் பொதுநல சங்கம் சார்பிலும், மணல் கடத்தல் தொடர்பாக, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை