நல்லாசிரியர் விருது பெறும் கல்வி சிற்பிகள்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில், இரண்டு ஆசிரியர்கள், வால்பாறையில் ஒரு ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.*பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த விலங்கியல் முதுகலை ஆசிரியர் சுதா, நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் முதுகலை ஆசிரியர் மகேந்திரபிரபு ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.முதுகலை ஆசிரியர் சுதா, கடந்த, 2016ம் ஆண்டு முதல் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு மேல்நிலை முதலாம் ஆண்டு உயிரி விலங்கியல் மற்றும் விலங்கியல் பாடத்துக்கான புத்தக தயாரிப்பு பணிக்கு நான்கு மாதங்கள் பள்ளி கல்வித்துறை வளாகம் சென்னையில் தங்கி புதிய பாட புத்தகத்தை எழுதிய, 17 ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.'நீட்' பயிற்சி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கொரோனா காலத்தில் இவர் தெருத்தெருவாக சென்று மாணவியரை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தார். இவரது பணியை பாராட்டி அரசு விருது அறிவித்துள்ளது.ஆசிரியர் கூறுகையில், ''விருது கிடைத்துள்ளது மேலும் பணியை சிறப்பாக செய்ய ஊக்கம் அளித்துள்ளது. அரசு விருது வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.* ஆசிரியர் மகேந்திரபிரபு கூறுகையில், 'விருது கிடைப்பதற்கு காரணம் நெகமம் அரசு பள்ளி தான். பள்ளியில் பயின்று தற்போது ஆசிரியராகவும் பணியாற்றுகிறேன். மாணவர்களுக்கு தன்னலம் கருதாமல் பணியாற்றுகிறேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வு குறித்து வேலையில்லா பட்டதாரிக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.பள்ளி நலனுக்காக, பல்வேறு வளர்ச்சிக்காக விருது வழங்கப்பட்டுள்ளது. விருது கிடைக்க உதவிய பள்ளி தலைமையாசிரியர் கனகராஜன், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.* பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் வசந்தகுமார், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு 'தினமலர்' நாளிதழ் சார்பில் லட்சிய ஆசிரியர் விருது பெற்றுள்ளார். சென்னையில் இன்று (5ம் தேதி) நடைபெறும் விழாவில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் விருது வழங்குகிறார்.