சிட்டி க்ரைம்
வழிப்பறி வாலிபர்கள் கைது
கோவை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் பத்மநாபன், 33; தனியார் நிறுவன மேற்பார்வையாளர். இந்நிலையில், அரசு கலை கல்லுாரி சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த எல்.ஜி.நகரை சேர்ந்த டேவிட் ராஜா, 26, நீலகிரியை சேர்ந்த நெல்சன் விஜய், 26 ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளனர். பத்மநாபன் பணம் தர மறுத்ததால், அவரை தாக்கி பணம் பறித்துச் சென்றனர். புகாரையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் இருவரையும் கைது செய்தனர். பெண்ணை தாக்கியவருக்கு சிறை
கோவை, சொக்கம்புதுாரை சேர்ந்த அன்பரசு, 46; தனியார் நிறுவன ஊழியர். இவர் சொக்கம்புதுார் கருப்பண்ணன்பதி, 2வது சந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் திலீப் குமார், 32 என்பவர் அன்பரசின் வீட்டு முன், மதுபோதையில் வந்து தகராறு செய்துள்ளார். இதை பார்த்த அன்பரசின் மனைவி, அவரை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த திலீப், அந்த பெண்ணை எட்டி உதைத்து தாக்கியுள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செல்வபுரம் போலீசார், திலீப் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 850 கிராம் குட்கா பறிமுதல்
ரத்தினபுரி போலீசார் காந்திபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காந்திபுரம், ஆறாவது வீதியில் இருந்த சிவராஜ், 50 என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட, குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 8500 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். லாட்டரி விற்றவர்கள் கைது
வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், இடையர் வீதி ஆட்டோ ஸ்டாண்டு அருகில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 57 என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல், காந்திபுரம் பகுதியில் காட்டூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், லாட்டரி சீட்டு விற்பனை செய்த ரத்தினபுரியை சேர்ந்த அபிரகாம்லிங்கன், 56 என்பவர் சிக்கினார். இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.