கோவை : தெற்கு ரயில்வேயில் அதிக பயணிகள் பயன்படுத்துவதிலும், வருவாய் ஈட்டுவதிலும் கோவை சந்திப்பு மூன்றாமிடத்தில் இருக்கிறது.இந்திய ரயில்வே அமைச்சகம் ஐந்தாண்டுக்கு ஒரு முறை, ஸ்டேஷன்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் வகைப்படுத்தி, அறிக்கை வெளியிடுகிறது.2023-24 நிதியாண்டில் பயணிகள் வருகை, வருவாய்அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 8,809 ஸ்டேஷன்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தம், 3.05 கோடி பயணிகள் பயன்படுத்தியதன் மூலம், 1,300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இரண்டாமிடத்தில் உள்ள சென்னை எக்மோர் ஸ்டேஷனை, 1.95 கோடி பயணிகள் பயன்படுத்தியிருக்கின்றனர்.இதன் மூலம், 600 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துஇருக்கிறது.மூன்றாமிடத்தில் உள்ள கோவை சந்திப்பை, 1.02 கோடி பயணிகள் பயன்படுத்தியதன் வாயிலாக, 345 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது; சேலம் கோட்ட அளவில், கோவை சந்திப்பு முதலிடத்தில் உள்ளது. சந்திப்பை மேம்படுத்தணும்
பயணிகள் பயன்பாடு மற்றும் வருவாய் ஈட்டுவதில் முதன்மையாக இருப்பதால், கோவை சந்திப்பை இன்னும் மேம்படுத்த கோரிக்கை எழுந்திருகிறது. இச்சந்திப்பில் ஆறு நடைமேடைகள் (பிளாட்பாரம்) உள்ளன. ஆனால், 150 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆறு நடைமேடை உள்ள சேலம் சந்திப்பில் 211 ரயில்கள், இயக்கப்படுகின்றன.கோவை சந்திப்பிலும் கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, 'கொங்கு குளோபல் போரம்' இயக்குனர் சதீஷ் கூறியதாவது:கோவை சந்திப்பில் உள்ள, ஆறு நடைமேடைகளில், இரண்டுதான் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள நான்கு நடைமேடைகளில், 80 ரயில்கள் கையாள முடியும்.கேரளாவில் இருந்து புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் கோவை சந்திப்பை தவிர்த்து,புறநகரில் பயணிக்கின்றன. அவற்றை கோவை சந்திப்பு வழியாக இயக்க நடவடிக்கை எடுத்தால், பயணிகளுக்கு உபயோகமாக இருக்கும். வருவாய் பெருகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கோவைக்கு முதலிடம்
சேலம் கோட்டத்தில் முதல் ஐந்து ஸ்டேஷன்களில், கோவை சந்திப்பு முதலிடத்தில் உள்ளது. 2023-24 நிதியாண்டில், 1.02 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம், 345 கோடி ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது.இரண்டாமிடத்தில் சேலம் சந்திப்பு உள்ளது. 44.9 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்; வருவாய் - 127 கோடி ரூபாய். ஈரோடு சந்திப்பு, மூன்றாமிடம் பெற்றுள்ளது; 43 லட்சம் பயணிகள் பயன் அடைந்துள்ளனர். 111 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.நான்காம் இடத்தில் திருப்பூர் உள்ளது; 39 லட்சம் பயணிகள் பயன்படுத்தியதன் மூலம், 96 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஐந்தாமிடத்தில் கரூர் உள்ளது; 9.69 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்; 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.