உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அட்வைஸ்

எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அட்வைஸ்

வால்பாறை;எஸ்டேட் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழக கேரள எல்லையில், வால்பாறை மலைப்பகுதியில் பருவ மழைக்குப்பின் பசுமையாக இருப்பதால், நுாற்றுக்கணக்கான யானைகள், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக, வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.யானைகள் பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன. சில எஸ்டேட் பகுதியில், தேயிலை தோட்டத்திலும் பகல் நேரத்தில் முகாமிடுகின்றன.இதனால், அந்தப்பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில், பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே ரோட்டை கடக்கும் என்பதால், வாகன ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்கக்கூடாது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள், இரவு நேரத்தில் யானைகள் வந்தால், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் அவற்றை பொதுமக்கள் துன்புறுத்தக்கூடாது.இவ்வாறு, தெரிவித்தனர்.

மனித - வனவிலங்கு மோதல் குறைவு

வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: வால்பாறையில் எஸ்டேட் தொழிலாளர் மத்தியில், மனித - வனவிலங்கு மோதலை தடுப்பது எப்படி என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, யானைகள் நடமாடும் பகுதியை, பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக நாள் தோறும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவை நடமாடும் பகுதியில், பொதுமக்கள் கண்டறியும் வகையில், எஸ்டேட் பகுதியில் சிகப்பு விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது.வனவிலங்குகளுடன் மனிதன் இசைந்து வாழ்வதால், கடந்த சில ஆண்டுகளாக அங்கு மனித வனவிலங்கு மோதல் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருவர் மட்டுமே யானை தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி