அபராதம் அதிகரிப்பால் சாலையில் கால்நடைகள் திரிவது குறைந்தது
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் அபராத தொகையை அதிகரித்ததால், நகரில் ஆடு, மாடுகள் சாலையில் திரிவது குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரில் நெல்லித்துறை சாலையில், 50க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளின் குப்பைகளை வெளியே கொட்டும் போது, அதில் கழிவு உருளைக்கிழங்குகள் இருக்கும். இதை தின்பதற்கு ஆடு, மாடுகள் வீதிகளில் சுற்றுகின்றன. மேட்டுப்பாளையம் நகரில் குறிப்பாக ஊட்டி, அன்னூர், சிறுமுகை சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. கடந்த வாரம் சிறுமுகை சாலையில், வாகனத்தில் வந்தவர்களை மாடு முட்டியதில், இருவர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வரை, நகராட்சி ஊழியர்கள், சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து, நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகத்தில் கட்டி வைப்பர். அதன் உரிமையாளர் வந்து கேட்கும்போது, சாலையில் மாடுகளை விடக்கூடாது என, எச்சரிக்கை செய்து மாடுகளை கொடுத்து வந்தனர். ஆனால் மாடுகளை வீடுகளில் கட்டி வைத்து வளர்க்காமல், வீதிகளில் திரிய விட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம், சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த, அபராத தொகையை அதிகப்படுத்தியது. அதன் பிறகு சாலைகளில் கால்நடைகள் திரிவது குறைந்துள்ளது.இது குறித்து நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் கூறியதாவது: மேட்டுப்பாளையம் நகராட்சியில் இதுவரை, 34 மாடுகள் பிடித்து, ஒரு மாட்டிற்கு, ஆறு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாட்டின் உரிமையாளரிடம் அவரின் ஆதார் அட்டை வாங்கிக் கொண்டு, மீண்டும் சாலையில் மாடுகளை விட்டால், பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுக்கு தரமாட்டோம் என, எச்சரிக்கை செய்தோம். இனிமேல் மாடுகளை கட்டி வளர்ப்பேன் எனவும், சாலையில் விட மாட்டேன் எனவும் உறுதிமொழி அளித்த பின், மாடுகளை கொடுத்து வருகிறோம். இதனால் நகரில் ஆடு, மாடு, கழுதைகள் திரிவது தற்போது குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.