தொடர் வேகத்தடைகளால் விபத்து அதிகரிப்பு; சப்-கலெக்டரிடம் வலியுறுத்தல்
பொள்ளாச்சி : 'நெடுஞ்சாலைகளில் அமைத்துள்ள தொடர் வேகத்தடைகளால் விபத்து ஏற்படுகிறது. இதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கித்குமார் தலைமை வகித்தார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார் முன்னிலை வகித்தார்.பா.ஜ., நகர செயலாளர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, வெங்கடேசா காலனி - அழகப்பா லே-அவுட் பகுதியில், ரோட்டோரங்கள் மற்றும் காலி மனைகளில் குப்பை கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள், ஈக்கள் அதிகரித்து சுகாதாரம் கடுமையாக பாதிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.மகாலிங்கபுரம் ரவுண்டானா பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பகுதியில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.பொள்ளாச்சி சி.டி.சி., டிப்போ ரோட்டில், வாகன பழுது நீக்கும் கடைகளின் முன் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.* வெங்கடேசா காலனி மக்கள் கொடுத்த மனுவில், 'வெங்கடேசா காலனி வள்ளலார் வீதியில், கீழே விழும் நிலையில் மரம் உள்ளது. இதனால், தெருவிளக்கு வெளிச்சம் முழுவதுமாக மறைத்துள்ளது. எனவே, மரக்கிளைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்,' என்றனர்.* சிறகுகள் மக்கள் அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில், தொடர் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகள், வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்பட்டு பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கின்றனர்.மேலும், வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தொடர் வேகத்தடைகளால் வால்பாறை, ஆனைமலை செல்லும் நெடுஞ்சலைகளில் மட்டும், 25க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, தனி கவனம் செலுத்தி இனிமேல் விபத்துகள் ஏற்படாத வகையில் தொடர் வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.