மரத்தில் ஆணி அடித்து விளம்பரம்; நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு!
ரோடு பணி முடியல!
நா.மூ.சுங்கம் - உடுமலை செல்லும் சாலையில், துறையூர் அருகே ரோடு பணி நிறைவடையாமல் உள்ளது. இரண்டு மாதமாக அப்படியே இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.- -வரதராஜ், பொள்ளாச்சி. தரை பாலம் தேவை
கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட் நுழைவுவாயிலில் உள்ள கால்வாய் கற்கள் சமமாக இல்லாததால், வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. பைக் ஓட்டுநர்கள் இவ்வழியில் செல்ல சிரமப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இந்த கற்களை அகற்றி, தரை பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-- -சஞ்ஜய், கிணத்துக்கடவு. கற்களை அகற்றுங்க!
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில் ரோட்டில், ஜல்லிக்கற்கள் பரவலாக கிடக்கிறது. இதனால் அவ்வழியில் பைக்கில் செல்பவர்கள் தடுமாறிச்செல்கின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர், ரோட்டில் உள்ள பள்ளத்தில் இருக்கும் ஜல்லிக்கற்களை அகற்றி, 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும்.- -டேவிட், பொள்ளாச்சி. தேங்கும் நீர்
உடுமலை சின்னவீரம்பட்டி வெற்றிவேல்நகரில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி கிடப்பதால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதை ஊராட்சி நிர்வாகத்தினர் சரிசெய்ய வேண்டும்.- பழனிச்சாமி, உடுமலை. நிழற்கூரை தேவை
வால்பாறை, காந்திசிலை வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததால், பஸ் பயணியர் வெயிலிலும், மழையிலும் நிற்கும் நிலை உள்ளது. எனவே, பயணியர் நலன் கருதி இங்கு நகராட்சி சார்பில் கூடுதலாக நிழற்கூரை அமைக்க வேண்டும்.-- -விபின், வால்பாறை. தெருநாய்கள் தொல்லை
உடுமலை, தளிரோடு சுரங்கபாலம் அருகே பாலாஜி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக அவ்வழியாக செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். குழந்தைகள் வெளியில் விளையாடினாலும், தெருநாய்கள் அச்சுறுத்தும் வகையில் துரத்துவதால் பெற்றோர் பீதி அடைகின்றனர்.- விஷ்ணுகிருபா, உடுமலை. வேகத்தடை வேண்டும்
உடுமலை, பழனியாண்டவர் நகர் ரவுண்டானா அருகே வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் அதிகமான வேகத்துடன் வந்து திரும்புகின்றனர். இதனால் நடந்து செல்வோரும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எதிரே வாகனங்கள் வரும்போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் வளைவின் அருகே தடுமாறி விழுகின்றனர்.- சத்யராஜ், உடுமலை. மின்விளக்குகள் எரிவதில்லை
உடுமலை - -பழநி ரோட்டின் நடுவே உள்ள மின்விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்விளக்குகள் முழுவதுமாக எரிய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முத்து, உடுமலை. கொசுத்தொல்லை அதிகரிப்பு
உடுமலை, பி.வி., கோவில் வீதியில் குப்பை கழிவுகள் சாக்கடை கால்வாயில் கொட்டப்படுகின்றன. கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைத்துக்கொண்டு, மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் தேங்குவதால் அப்பகுதியில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது.- மாணிக்கம், உடுமலை. வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் நான்கு சக்கர வாகனங்கள் விதிமுறை மீறி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. ரோட்டை கடந்துசெல்வதற்கு பொதுமக்கள் நிற்பதற்கும் இடமில்லாமல் நடுரோட்டில் நிற்கும் நிலையில்தான் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.போக்குவரத்து போலீசார் பார்க்கிங் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- தாமோதரன், உடுமலை. மரத்தில் ஆணி அடிக்காதீங்க!
பொள்ளாச்சி, ஆர்.எஸ்.புரம் முதல் குறுக்கு தெரு, ரத்தினம் நகர் சந்திப்பில் உள்ள மரத்தில், அதிக அளவு விளம்பர பதாகைகளை ஆணி அடித்து தொங்க விட்டிருந்தனர். மரம் முழுக்க ஆணியே உள்ளது. இதனால் மரத்தின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது. இதை தடுக்கவும், மரத்தில் ஆணி அடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.- -மாணிக்கம், பொள்ளாச்சி.