ரோட்டில் தேங்கிய தண்ணீர்: வாகன ஓட்டுநர்கள் அவதி
நெகமம்;பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் நெகமம் பகுதியில், தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டுநர்கள் அவதி அடைந்துள்ளனர். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெகமம் பகுதியில் பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் இருந்து வடசித்துார் செல்லும் இணைப்பு ரோடு உள்ளது. நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் இந்த ரோட்டில் காணப்படும் குழியில், அதிக அளவு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.மேலும் இந்த ரோடு வழியாக, விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வருகின்றனர். மேலும், கிணத்துக்கடவு, கோவை, பகுதிகளுக்கு செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.அந்த ரோட்டில், காணப்படும் பள்ளத்தால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ரோட்டில் வாகனங்கள் அதிக வேகமாக செலகின்றன. இதனால், இந்த இடத்தில் செல்லும் போது வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.முன் செல்லும் வாகனத்தை ஓவர் டேக் செய்யவும், சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயம் அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் சிலர், இங்கு கீழே விழுவதும் வாடிக்கையாகிவிட்டது.இதுமட்டுமின்றி வடசித்துார் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களும், இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இங்கு மழை நீர் தேங்காத படி, இந்த இடத்தை உயரப்படுத்தி சீரமைப்பு செய்ய, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.