மகளிர் தின விழா; பெண்களுக்கு பரிசு வழங்கி உற்சாகம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள், பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது இடங்களுக்கு சென்று போலீசார், டாக்டர்கள், பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.பள்ளி ஆசிரியர் மகேஸ்வரிக்கு சிறந்த கல்வியாளர் விருது, ஆசிரியர் அபிராமிக்கு சிறந்த பெண்மணிக்கான விருது பள்ளி நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், மேலாளர் பெலிஸ்க் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.* போலீஸ் சார்பில், சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, மாரத்தான் போட்டி நடந்தது. ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி, மகாலிங்கபுரம் ஆர்ச் முதல், பல்லடம் ரோடு வரை நடைபெற்றது. நகராட்சி தலைவர் சியாமளா, டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.*பிரம்மகுமாரி அமைப்பு சார்பில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஏ.எஸ்.பி., மற்றும் டாக்டர் சகுந்தலா, வக்கீல் தாஹிரா மற்றும் முக்கிய பிரமுகர்கள், அமைப்பின் திருப்பூர் மாவட்ட பொறுப்பு சகோதரி ரேணுகா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில், லயன்ஸ் கிளப் அரங்கில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். ஏ.எஸ்.பி., சிருஷ்டிசிங் கலந்து கொண்டார். ஆலாங்கடவு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றது.'சூழலைக் காக்கும் குட்டி பொம்மன்' என்ற தலைப்பில் மாணவர் சிவவிஷ்ணு பேசினார். மாரியம்மாள் வள்ளி முருகன் கலைக் குழுவைச் சேர்ந்த மாணவியர் ஒயிலாட்டம் ஆடினர். கவிஞர் உமாமகேஸ்வரி பெண்கள் சிறப்பு குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை, மன்றத் தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.* பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் தலைமை வகித்தார். புற்றுநோய் மருத்துவ நிபுணர் மணிவண்ணன் கலந்து கொண்டு, மார்பக புற்றுநோய் பாதிப்பு, முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்வது குறித்து பேசினார். நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்பினர் இனிதா, பெண்கள் சாதனை குறித்தும், நீர்நிலைகள் பாதுகாப்பு அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.* ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் தலைவர்களாக உள்ள கண்மணி, சாரதா, பிரியா, சரஸ்வதி ஆகியோர் தங்களது வாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகள் மற்றும் சவால்கள் குறித்து பேசினர்.ஆனைமலை வட்டார கல்வி அலுவலர் செல்வமணி பங்கேற்று, பழங்குடியின குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை தடுப்பதற்கான முயற்சிகள் குறித்து பேசினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்ததன் பேரில், கணிதவியல் துறைத் தலைவர் இந்துமதி, வணிகவியல் துறைத் தலைவர் பிருந்தா ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. புவி நேரம் குறித்த முக்கியத்துவம் குறித்து டபிள்யூ.டபிள்யூ.எப்., ஒருங்கிணைப்பாளர் சரவணன் பேசினார்.* சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி, பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியும் நடந்தது. கல்லுாரி முதல்வர் வனிதாமணி தலைமை வகித்தார். மகாலிங்கபுரம் வளைவில் துவங்கிய வாகன பேரணியை நகராட்சி தலைவர் சியாமளா துவக்கி வைத்தார். ஏ.எஸ்.பி., சிருஷ்டிசிங் கலந்து கொண்டார். கல்லுாரியில் நடந்த விழாவில், செயலாளர் விஜயமோகன், இயற்கை விவசாயி பத்மஜோதி, நுகர்வோர் மன்ற தலைவர் இந்திராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். சமுதாயப் பணியிலும் சிறந்து விளங்கும் பேராசிரியர்கள் உட்பட, 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, 'தங்க மங்கை' விருதும் வழங்கப்பட்டது.* ஆனைமலை அருகே தாத்துாரில், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' இந்தியா கிராம முன்னேற்ற திட்டத்தின் வாயிலாக, 145 மகளிர் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற, மகளிர் தின விழா நடந்தது. விரிவாக்க அலுவலர் சரஸ்வதி, மகளிர் உதவி ஆய்வாளர் சுனிதா, மண்டல வட்டார கல்வி அலுவலர் செல்வமணி, வட்டார அலுவலர் மஞ்சுளாதேவி ஆகியோர் பங்கேற்றனர். வட்டார பயிற்றுநர்கள் புனிதவள்ளி நிகழ்ச்சியை நடத்தினார்.* உடுமலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்திய மருத்துவ சங்க உடுமலை கிளை மற்றும் பிரியா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை சார்பில் ஊர்வலம் நடந்தது. டாக்டர்கள் சுந்தரராஜன், மணிவர்மா, கவுதம் விநாயக் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.பஸ் ஸ்டாண்ட் அருகில் துவங்கிய ஊர்வலம், தளி ரோடு உட்பட முக்கிய வீதிகள் வழியாக வந்து நேதாஜி மைதானத்தை அடைந்தது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை குறித்து கோஷமிட்டனர். கல்லுாரி முதல்வர் சாந்தி நன்றி கூறினார்.