சென்னை: ரேஷன் கார்டுதாரர் வீடுகளில், ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டம், சென்னையில் நேற்று சோதனை ரீதியாக துவங்கியது.தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கார்டில் உள்ள உறுப்பினர்கள், கடைக்கு வந்து, விற்பனை முனைய கருவியில் கைரேகையை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். இதனால் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களின் வீடுகளுக்கு ரேஷன் ஊழியர்கள் வாயிலாக, உணவுப் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை அரசு துவக்க உள்ளது. இத்திட்டத்தை சோதனை ரீதியாக, சென்னை, திண்டுக்கல், நீலகிரி உட்பட, 10 மாவட்டங்களில், இம்மாதம், 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை செயல்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன. சென்னையில் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் நேற்று சோதனை ரீதியாக துவக்கப்பட்டது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஆர்.ஏ.புரம், ஜாபர்கான்பேட்டை, விருகம்பாக்கம் ஆகிய இடங்களில், தலா ஒரு ரேஷன் கடைகளின் சார்பில், அக்கடைகளில் பொருட்கள் வாங்கும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.மொத்த பயனாளிகள் எண்ணிக்கை, 910. நேற்று, காலை, 8:00 மணிக்கு, வேனில் ரேஷன் பொருட்கள், எடை இயந்திரம், விற்பனை முனைய கருவி ஆகியவை எடுத்து செல்லப்பட்டு, கார்டுதாரர்களின் வீடுகளுக்கு அருகில் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று மதியம் வரை, 120 வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு வீட்டிற்கு வினியோகிக்க, 7 - 10 நிமிடங்கள் வரை ஆனது. இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இது தொடர்பாக வரும், 6ம் தேதி, தலைமைச் செயலர் ஆய்வு நடத்துகிறார். அதில், எந்த தேதியில் இருந்து திட்டத்தை துவக்குவது என்பது முடிவு செய்யப்படும்' என்றார்.
பிரச்னை தீர்ந்தது
எங்கள் பகுதி ரேஷன் கடைக்கு, இரண்டு தெரு கடந்து செல்ல வேண்டும். யாராவது உதவி செய்தால் தான் பொருள் வாங்க முடியும். சில சமயங்களில் குறிப்பிட்ட தேதியில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது, வீடு தேடி பொருட்களை கொண்டு வந்து தருவதால் பெரும் பிரச்னை தீர்ந்துள்ளது.
- கோமதி,
74, வெங்கடேஸ்வரா நகர், 2வது பிரதான சாலை, வேளச்சேரி.