உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் 52 விபத்துகள்; 14 உயிரிழப்பு!

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் 52 விபத்துகள்; 14 உயிரிழப்பு!

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், விபத்து எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க, போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, ஆச்சிபட்டி முதல் ஈச்சனாரி வரை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. ரோடு முழுவதும் சென்டர்மீடியன் அமைத்து, முக்கிய இடங்களில் விபத்தை தடுக்க மேம்பாலங்கள் மற்றும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டது.மேலும், கிராமப்புற சாலைகள் சந்திக்கும் இடங்களில், சென்று வர சென்டர் மீடியன் பகுதிகளில் 'யூ டர்ன்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.விபத்தை தடுக்க ஒவ்வொரு 'யூ டர்ன்' பகுதியிலும், சிக்னல் மற்றும் மஞ்சள் நிற குறுக்கு பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் முக்கிய இடங்களில் டிவைடர்களும் வைக்கப்பட்டுள்ளது.விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கிணத்துக்கடவு ஸ்டேஷன் எல்லைக்குள், இந்தாண்டு, ஜனவரி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரையில், மொத்தம், 52 விபத்துகள் நடந்துள்ளது. விபத்துகளில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். 65க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், 90 சதவீத விபத்து, கிணத்துக்கடவு ஏலூர் முதல் கோவில்பாளையம் வரை உள்ள பகுதியில் நடந்தது.

காரணம் என்ன?

இந்த ரோட்டில், வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. பைக் பிரியர்கள் பலர், 70 முதல் 110 கி.மீ., வேகத்தில் பயணிக்கின்றனர். காரில் செல்பவர்கள், 100 முதல் 120 கி.மீ., வேகத்தில் பயணிக்கின்றனர். பஸ் போன்ற கனரக வாகனங்களும் 100 கி.மீ., வேகத்தில் செல்கின்றன.இதனால், ரோட்டின் குறுக்கே நாய், இருசக்கர வாகனங்கள் குறுக்கிடும் போது, அனைத்து வாகனங்களும் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன. சென்டர்மீடியனில் மோதி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது.மேலும், 'ஓவர் டேக்' செய்யும் போது, பஸ் ஓட்டுநர்கள் வாகனங்களை ஒதுக்கி விடும் போது, தடுமாறி விபத்து ஏற்படுகிறது. கிராம இணைப்பு ரோட்டில் இருந்து, 'யூ டர்ன்' பகுதி வரை எதிர் திசையில் வாகனங்களை இயக்குவதால், விபத்து ஏற்படுகிறது.

ரோட்டில் குளறுபடி

இந்த ரோட்டில் கிராமப்புற சாலைகள் இருக்கும் இடத்தின் அருகே, சர்வீஸ் ரோடு இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் ரோட்டை கடக்க, நடை மேடையுடன் கூடிய மேம்பாலம் அல்லது சுரங்க வழி அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.இது மட்டும் இன்றி, இரவு நேரத்தில் சிக்னல் ஒளிராமல் இருப்பது, முறையான பார்க்கிங் வசதி இல்லை மற்றும் ரோட்டில் பதிக்கப்பட்ட சோலார் சிகப்பு விளக்கு பழுதடைந்து உள்ளது.ரோடு இறக்கமான பகுதியில், சென்டர் மீடியனில் 'யூ டர்ன்' அமைக்கப்பட்டுள்ளதாலும், கவனக்குறைவாக வாகனங்களை திருப்புவதாலும் விபத்து ஏற்படுகிறது. இந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

அலட்சியமும் காரணம்

ரோட்டில் குறைகள் ஒரு பக்கம் இருந்தாலும், வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவாலும், அதிக வேகமாக வாகனங்களை இயக்குவது, இண்டிகேட்டர் போடாமல் வாகனங்களை இடது, வலது பாதைக்கு மாற்றுவது, ஹாரன் அடிக்க தவறுவது, ரோட்டின் ஓரத்தில் உள்ள கடை மற்றும் உணவகங்களின் 'பார்க்கிங்' ஏரியாவில் வாகனங்களை நிறுத்தாமல், ரோட்டோரத்திலேயே வாகனங்களை நிறுத்துவது விபத்துக்கு வழிவகுக்கிறது.பல இடங்களில், மஞ்சள் கோட்டை தாண்டி 'பார்க்கிங்' செய்கின்றனர். மொபைல்போனில் பேசிக்கொண்டே ரோட்டை கடப்பது, குடி போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற காரணங்களாலும் விபத்து நேரிடுகிறது.

தீர்வு வேண்டும்

வாகன வேகத்தை கட்டுப்படுத்தினால் விபத்து எண்ணிக்கை பெருமளவு குறையும். இதை செயல்படுத்த மாநகர பகுதியில் வேகமாக செல்லும் வாகனத்தை சி.சி.டி.வி., கேமரா கொண்டு கண்காணித்து அபராதம் விதிப்பது போல், இந்த தேசிய நெடுஞ்சாலையிலும், 'யூ டர்ன்' பகுதிகளிலும், கேமரா பொருத்தி வேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.இருசக்கர வாகன ஓட்டுநர்கள் ரோட்டின் ஓரத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அவர்களுக்கான பாதைக்கு இடத்தை ஒதுக்கி விட்டு 'மார்க்' செய்ய வேண்டும். எல்லை கோட்டை தாண்டும், இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்.தாறுமாறாக இயக்கப்படும் பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், விபத்து எண்ணிக்கை, உயிரிழப்புகளை குறைக்க முடியும். இதற்கு, போலீஸ், வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Babu Rajendran
ஆக 30, 2024 11:12

யாருக்கும் சுய பொறுப்பு இல்லை, நான் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்தவன். அரசுக்கும் 100% பொறுப்பு இல்லை.இதுவரை சர்விஸ் சாலை அமைக்கப்படவில்லை.பள்ளி குழந்தைகள் சாலை கடக்கும் இடத்தில் இதுவரை விபத்தில் அகப்பட்டவர்கள் 60% உயிர் பிறக்கவில்லை. என் பெற்றோர்கள் 2 சக்கர வாகனத்தில் சாலை கடக்க நின்று கொண்டு இருந்த ஸ்கூட்டரில் கல்லூரி மாணவர்கள் பைக் மோதி சுக்கு நூறாக என் தந்தையின் கால் நொறுங்கி உயிருக்கு போராடி பிழைக்க வைத்தோம். பொறுப்பில்லாத மக்கள், பொறுப்பில்லாத கொள்ளை கும்பல் அரசாங்கம், அவர்களுக்கு சொம்படிக்கும் ரூ.200 பிச்சைக்காரர்கள்... விபத்துக்கள் குறைய வாய்ப்பு இல்லை ஐயா.


GoK
ஆக 28, 2024 16:37

முதலில் யாருக்கு வாகனம் ஓட்டும் உரிமை வழங்கப்படுகிறது, எப்படி என்பதை விசாரியுங்கள். சுய கட்டுப்பாடு இல்லாத ஓட்டுனர்கள், சுய நினைவு இல்லாத ஓட்டுனர்கள்...இவர்களால் அனைவருக்கும் தொல்லை. ரோடுகள்தான் விரிவாகின்றன, ஓட்டுனர்களின் செலுத்தும் முறைகள் குறைந்துகொன்டே போகின்றன.


அப்பாவி
ஆக 28, 2024 10:01

படத்தைப் பாருங்க. தத்தி நடு ரோட்டில் பைக்குடன் நிக்கிறான். இவனையெல்லாம் இடிச்சு தள்ளிட்டு போய்க்கிட்டே இருக்கணும்.


முக்கிய வீடியோ