அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க.,வினர் மீது 55 வழக்கு
கோவை; கோவை மாவட்டத்தில், அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது, 55 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, கோவை செல்வபுரத்தில், 9ல் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். செல்வபுரத்தில் ரோடு ஷோ, தொண்டாமுத்துார், சுந்தராபுரம், கோதவாடிப்பிரிவு, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அவரை வரவேற்று, பல்வேறு பகுதிகளிலும் கட்சியினர் பிளக்ஸ் பேனர்கள், எம்.ஜி.ஆர்., - ஜெ., 'கட்-அவுட்' வைத்திருந்தனர். அனுமதியின்றி பிளக் ஸ் பேனர்கள், 'கட்-அவுட்' வைத்ததாக, அந்தந்த பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது, கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார், பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், 35 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கோவை மாநகரில் போத்தனுார், குனியமுத்துார், சுந்தராபுரம், செல்வபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், 20 வழக்குகள் என, மொத்தம், 55 வழக்குகள் பதியப்பட்டன. போலீசார் கூறுகையில், 'பேனர்கள் வைக்கும் முன், அனுமதி கடிதம் கொடுத்து, அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். அந்நடைமுறை பின்பற்றப்படவில்லை. அனுமதியின்றி பேனர் வைப்பது குறித்து நீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டுதல் வழங்கியுள்ளது' என்றனர்.