வனப்பகுதியில் 775 விதைப்பந்து வீச்சு; சிங்கவால் குரங்குகளை காக்க நடவடிக்கை
வால்பாறை : சிங்கவால் குரங்குகளை அழிவின் பிடியில் இருந்து பாதுகாக்க, வால்பாறை வனப்பகுதியில் விதைபந்து வீசப்பட்டது.தேசிய மாணவர் படையின் சமூக சேவை மற்றும் சமுதாய மேம்பாட்டின் ஒரு பகுதியாக, கோவை குருப் -- 2 தமிழ்நாடு விமானப்படை, என்.சி.சி., வனத்துறை இணைந்து, மேற்குதொடர்ச்சி மலையில், அழிந்து வரும் நிலையில் உள்ள சிங்கவால் குரங்குகளை பாதுகாக்கும் வகையில், வனப்பகுதியில் விதைப்பந்து வீசப்பட்டது.சிங்கவால் குரங்குகள் விரும்பி உண்ணும் பழங்களின், 775 விதைகளை காடுகளில் இருந்து என்.சி.சி., மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட விதைகளை கொண்டு, மாணவர்கள் விதைபந்துகளை உருவாக்கினர்.சிங்கவால் குரங்குகள் அதிகம் காணப்படும், அய்யர்பாடி, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், விதைபந்துகள் நேற்று வீசப்பட்டன. நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) கமாண்டர் பர்குணன், தமிழ்நாடு விமானப்படை என்.சி.சி., அதிகாரிகள் சதீஸ், விகாஸ், ரவி, விஷாந்த், கல்லுாரி என்.சி.சி., அதிகாரிகள் லாவண்யா, ரோகிணி, சூர்யஉமாதேவி, ஜெகன்னாதன் மற்றும் வனச்சரக அலுவலர்கள் வெங்கடேஷ், கிரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நோட்டீஸ்
தேசிய மாணவர்படை மற்றும் தமிழ்நாடு விமானப்படை சார்பில், வால்பாறை நகர் பகுதி மக்களுக்கு, இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.அதில், வால்பாறையின் இயற்கையை பாதுகாக்க, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம். தண்ணீரை வீணாக்காமல் சேமிப்போம், மரம் மனிதனுக்கு கிடைத்த மகத்தான வரம், இயற்கை அழகு மரம், அதை அழியாமல் காப்பதே அறம், என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.