கோவையை கலக்கிய ரோலெக்ஸ் காட்டு யானை ஒருவழியாக சிக்கியது
தொண்டாமுத்துார்: கோவையில், விவசாய பயிர்கள் மற்றும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ரோலெக்ஸ் என்ற காட்டு யானையை, 43 நாட்கள் போராட்டத்துக்கு பின், வனத்துறையினர் நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்கள், வீடுகளை ரோலெக்ஸ் என்ற காட்டு யானை சேதப்படுத்தி வந்தது. இதை பிடிக்க, வனத்துறையினர், செப்., 5 முதல், நரசிம்மன், முத்து, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகளுடன் முகாமிட்டனர். வனத்துறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்த சின்னதம்பி கும்கி யானை, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து, வசீம், 47, மற்றும் பொம்மன், 24, ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, ரோலெக்ஸ் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கினர். தேவராயபுரம், இச்சுக்குழி பகுதியில் உள்ள தோட்டத்தில், ரோலெக்ஸ் யானை இருப்பது தெரியவந்தது. நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு, வனக்கால்நடை டாக்டர்கள் கலைவாணன், ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். அதன் பின், அங்கிருந்து வனப்பகுதியை நோக்கி நகர்ந்த யானை, பின் சோர்வடைந்தது. வனத்துறையினர், மூன்று கும்கி யானைகள், இரு ஜே.சி.பி., இயந்திரங்கள், 50க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்களின் உதவியுடன், காலை, 7:00 மணிக்கு, வனத்துறையினரின் பிரத்யேக லாரியில், யானையை ஏற்றினர். குளூக்கோஸ் செலுத்தினர். உடல்நிலை அறிய, ரத்த மாதிரிகள் சேகரித்தனர். நேற்று காலை, 7:30 மணிக்கு, பலத்த பாதுகாப்புடன், ரோலெக்ஸ் யானையை, ஆனைமலை, வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். விவசாயிகள், வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.