வால்பாறை ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடரும் அதிரடி நடவடிக்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.அதன்பின், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, குழு அமைத்து இடம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், கடந்த, 9ம் தேதி முதல் பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.நேற்று, வால்பாறை ரோடு ஆவல்சின்னாம்பாளையம் அருகே ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீட்டின் சுவர் இடிக்கப்பட்டது. பல்லடம் ரோட்டில் உள்ள கடைகள், ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த படிக்கட்டுகள், கடைகளின் மேற்கூரைகள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பல முறை எச்சரிக்கை விடுத்தும், நோட்டீஸ் வழங்கியும், அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. கடந்த, நான்கு நாட்களாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள், சுவர்கள், தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.மேலும், வாடகைக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஸ்டாண்ட் போன்றுநிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே போடப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டன.கடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் கடைகள் அமைத்தால் பொருட்கள் பறிமுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.