உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க இலக்கு: தேர்ச்சி குறைந்த பள்ளிகளுக்கு கூடுதல் கவனம்

 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க இலக்கு: தேர்ச்சி குறைந்த பள்ளிகளுக்கு கூடுதல் கவனம்

கோவை: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் (2025 - 2026) பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 105 உயர்நிலைப் பள்ளிகளும், 115 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 37,883 மாணவர்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வை 34,966 மாணவர்களும் எழுத உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில், தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, அனயூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகியது. 85 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு

சிறப்பு பயிற்சி: சி.இ.ஓ.,தகவல்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், '' 2024ல் 96.97 ஆக இருந்த பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், 2025ல் 97.48 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதனை மேலும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாடங்களைப் புரிந்துகொள்ளத் தடுமாறும், 'மெல்லக் கற்கும் மாணவர்களை' கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை, தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ