வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டி; ஒவ்வொரு போட்டியிலும் ஐவர் தேர்வு
பொள்ளாச்சி : அரசு பள்ளிகளில், கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் நிலையில், வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும், முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்த, கடந்த இரு ஆண்டுகளாக, அரசுப்பள்ளிகளில், கலைத்திருவிழா போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நடப்பாண்டு, ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை, பல்வேறு பிரிவுகளில், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டி நடத்தப்படுகிறது.அதன்படி, ஒவ்வொரு கட்ட போட்டி முடிவுகளும், பள்ளி அளவில் ஒரே முறை பதிவு செய்யப்படும் வீடியோ வாயிலாக, தீர்மானிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, குறுவள மற்றும் வட்டார அளவிலான போட்டிகளை, நேரடியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், குறுவள அளவிலான போட்டியைப் பொறுத்தளவில், முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களின் தகவல்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும், முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களின் வீடியோக்களை 'எமிஸ்' தளத்தில், 'பயோ லாகின்' வாயிலாக பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்படும்போது, குழு அமைக்கப்படும். அதாவது, போட்டி நடைபெறும் பள்ளியின் தலைமையாசிரியர் முதன்மை அமைப்பாளர், மேலும் ஒரு தலைமையாசிரியர் உதவி அமைப்பாளர், மக்கள் பிரதிநிதி ஒருவர், பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி இருவர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் என, ஏழு பேர், குழுவில் இடம்பெறுவர்.இவர்கள், போட்டி நடத்தும் இடம், நடுவர் குழுவினரை தேர்வு செய்தல், நடுவர்களின் மதிப்பெண் தாள்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இம்மாதம் இறுதிக்குள் போட்டிகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.