உள்ளூர் செய்திகள்

விளாசல்!

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள்... அதிகாரிகள் அலட்சியத்தால் ஆவேசம்பொள்ளாச்சி: ‘குறைதீர் கூட்டத்தில் ஆறு மாதமாக பிரச்னைகளை தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை; பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்,’ என, விவசாயிகள் வலியுறுத்தினர். பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், சப்–கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. விவசாயிகள் பேசியதாவது: பொள்ளாச்சி சி.டி.சி., மேடு பகுதியில் செயல்படும் புதிய பஸ் ஸ்டாண்ட்டிற்கு, கோவை செல்லும் பஸ்களை மாற்றம் செய்தால், நகரில் நெரிசலை கட்டுப்படுத்தலாம். அதே போன்று, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் இடையே உள்ள சுரங்க நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மழை பொழிவின்றி, வறட்சி நீடிப்பதால் அணைகளில் இருந்து குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனம் முறையாக கிடைக்க அரசு தீவனங்களை வழங்க வேண்டும். ஆறு மாதமாக மனு கொடுத்தும் ரோடு பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை; பதிலும் வரவில்லை. குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, அறிவுறுத்த வேண்டும். வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். குடிநீர் குழாய் பதிப்புக்காக கால்வாய்களை சேதப்படுத்தியதை சீரமைக்கணும். வேளாண் பொறியியல் துறை சார்பில் மானியத்தில் வழங்கப்படும் உபகரணங்களுக்கு உண்மையான விலை, மானியம் குறித்து விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கணும். கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்காக இடம் கொடுத்த விவசாயிகளுக்கு வழித்தட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை. கடுமையான வறட்சியால் பி.ஏ.பி., பாசனத்துக்கு முறையாக தண்ணீர் வழங்க முடியாத சூழல் உள்ளது. கால்வாய்களை துார்வாரி உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட போது, தேர்தல் அறிவிப்பால், தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று  நடவடிக்கை எடுக்கப்படம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை பணிகள் துவங்கவில்லை. உடனடியாக துார்வாரும் பணிகளை துவங்க வேண்டும். பாசனத்துக்கு தண்ணீர் திறப்பின் போது, கண்காணிப்பு குழு அமைத்து  கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களில் இறந்த கோழிகளை வீசுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் வாயிலாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.

அதிகாரிகளுக்கு அறிவுரை!

சப் – கலெக்டர் பேசியதாவது: கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைக்க இடம் கொடுத்த விவசாயிகளுக்கு வழித்தடம் வசதி ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி., வாயிலாக, மத்திய அமைச்சருக்கு மனு கொடுக்கப்பட்டது. மூன்றரை மீட்டருக்கு ரோடு போட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அவர்களால் இயலாவிட்டால், ஊராட்சி அல்லது வேறு நிதியில் ரோடு அமைக்க இயலுமா என முயற்சி எடுக்கலாம். விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரணி கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ