தெரு நாய்க்கடியால் அவதிப்படுவோர் தினமும் 2 முதல் 5 பேர் வரை பாதிப்பு
மேட்டுப்பாளையம்: காரமடை நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தினமும், இரண்டு முதல் ஐந்து பேர் வரை, நாய்க்கடிக்காக, காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வருகின்றனர். காரமடை நகராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரி நகரில், அண்மையில் தெருநாய் ஒன்று கடித்ததில் பள்ளி சிறுவன் ரேபிஸ் நோய் பாதித்து பலியானான். நாய் கடித்த போது, அதை அச்சிறுவன் வீட்டில் சொல்லவில்லை. மேலும் விழிப்புணர்வு இல்லாததால் முதல் கட்ட சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் ரேபிஸ் நோய் பாதித்து அச்சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காரமடை நகர் பகுதி, தொலைதுார கிராமப்பகுதிகள், சிறுமுகை அருகேயுள்ள கிராமப்புறங்கள் என, அப்பகுதி மக்களில் தினமும், இரண்டு முதல் ஐந்து பேர் வரை நாய்க்கடி சிகிச்சைக்காக, காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகின்றனர். காரமடை வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர் கூறியதாவது:- நாய், பூனை மற்றும் வன விலங்குகளின் கடியால் அல்லது கீறல்களால், மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ரேபிஸ் நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, புண் அல்லது கடித்த இடத்தில் வலி, குமட்டல், வாந்தி, மனச்சோர்வு, ஹைட்ரோபோபியா என சொல்லக்கூடிய தண்ணீருக்கு பயம், மூளை அழற்சி, சுவாச செயலிழப்பு ஆகியவைகள் ஏற்படலாம். ரேபிஸ் நோயை தடுக்கும் வழிமுறைகள் என்றால் ரேபிஸ் தடுப்பூசி தான். ரேபிஸ் நோயைத் தடுக்க இது முதன்மையானதாக உதவுகிறது. விலங்குகளால் கடிக்கப்பட்டால், உடனே மருத்துவரின் ஆலோசனைப்படி ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். கடி அல்லது கீறல் ஏற்பட்டால், காயத்தினை குழாய் வாயிலாக வெளியேறும் தண்ணீரில், சோப்பு பயன்படுத்தி சுத்தமாக கழுவி, மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டு பாதுகாக்க வேண்டும். ரேபிஸ் நோயை கண்டறிவது கடினம், ஏனெனில், ஆரம்ப அறிகுறிகள் மற்ற நோய்களுடன் ஒத்திருக்கலாம். அறிகுறிகள் தென்பட்டவுடன், ரேபிஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால், அது ஆபத்தானது. இதற்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றது. இவ்வாறு, அவர் கூறினார்.----