உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வனத்துறை வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு வனச்சரகங்களில் பணிகள் தீவிரம்

 வனத்துறை வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு வனச்சரகங்களில் பணிகள் தீவிரம்

வால்பாறை: வனத்துறை வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு பணி, வால்பாறையில் தீவிரமாக நடக்கிறது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு உள்நாட்டில் இடம் பெயரும், பறவைகள் குறிப்பிட்ட சீசனில் வலசை வந்து செல்லும். குறிப்பாக, கடந்த மாதம் இமயமலையிலிருந்து வாலாட்டி பறவைகள் வால்பாறையின் பல்வேறு பகுதியில் முகாமிட்டன. இது இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல், வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தற்போது நடந்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் அரிய வகை பறவைகள் அதிக அளவில் உள்ளதால், கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடக்கிறது. மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையில், வனவர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின் போது, சிறிய குளங்கள் மற்றும் ஆற்றங்கரை ஈரமான பகுதிகளில் வாழும் குருவி, மலபார் கிளி, மைனா, வாலாட்டி பறவை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளை கண்டறியப்பட்டன. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அரிய வகை பறவைகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், உலகின் அறியவகை பறவைகள் கணக்கெடுப்பின் போது தென்பட்டன. பறவைகள் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பறவைகளை பாதுகாக்கும் வகையில் எஸ்டேட்களில் தேயிலை செடிகளுக்கு பூச்சி மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும். கோடை காலங்களில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க பொதுமக்கள், சுற்றுலா பயணியர் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்