உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போடும் திருவிழா

ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போடும் திருவிழா

கோவை:கோவையில் நேற்று நடந்த கத்தி போடும் திருவிழாவில், பக்தர்கள் ரத்தம் சிந்தி, ஊர்வலமாக வந்து சவுடாம்பிகை அம்மனை வழிபட்டனர். கோவை ராஜ வீதியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில், விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு, கத்தி போடும் திருவிழா நேற்று நடந்தது. ஆர்.எஸ்.புரம் லட்சுமி கணபதி கோயிலில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கத்தியால் உடலை காயப்படுத்தி ரத்தம் சிந்தியபடி, 'வேசுக்கோ... தீசுக்கோ...' என்ற முழக்கத்துடன், ராஜ வீதியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தனர். கத்தியால் உடலை கீறிக் கொண்டதால், பக்தர்களின் உடலில் இருந்து ரத்தம் வடிந்தது. அந்த காயங்கள் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு ஆடியும், பாடியும் அம்மனை வழிபாடு செய்தனர். ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் மோகன்குமார் கூறியதாவது: இது, 400 ஆண்டுகள் பழமையான கோயில். கோவையில் 200 ஆண்டுகளாக கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் விழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. பக்தர்கள் கத்தியால் உடலை காயப்படுத்தி ரத்தம் சிந்தி, அம்மனை ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம் . இக்கோயிலின் பூர்வீகம் ஆந்திரா ஹம்பி. இங்கு வந்து குடியேறிய, தேவாங்கர் சமூக மக்கள் தங்களின் குலதெய்வமான ராமலிங்க சவுடாம்பிகை அம்மனை வேண்டி, தங்களுடன் வரும் படி அழைத்தனர். அப்போது அம்மன், 'நீங்கள் என்னை திருப்பிப் பார்க்காமல் முன்னே செல்லுங்கள். நான் உங்களை பின் தொடர்ந்து வருகிறேன்' என்று உத்தர விட்டது. அதன்படி, மக்கள் முன்னே சென்றனர். அம்மன் தன் கால் சலங்கை ஒலிக்க பின்தொடர்ந்து வந்தது. ஆற்றை கடந்தபோது, அம்மன் கால் சலங்கை சத்தம் நின்று விட்டது. சத்தம் கேட்காததால் மக்கள் திரும்பிப் பார்த்தனர். அம்மனின் உத்தரவை மீறி திரும்பிப் பார்த்ததால், அம்மன் கோவித்துக்கொண்டு மறைந்து விடுகிறது. மக்கள் மன்றாடி வேண்டினர். அப்போது, அம்மன் என்னை ரத்தம் சிந்தி வருந்தி அழைத்தால் வருவேன் என்கிறது. அதன்படியே, பாரா கத்தியால், 'வேசுக்கோ... தீசுக்கோ...' என்று உடலை காயப்படுத்தி ரத்தம் சிந்தி அழைத்து வந்தனர். இந்த ஐதீகத்தை அன்று முதல் இன்று வரை பக்தர்கள் பின்பற்றி, நேர்த்திக்கடன் செ லுத்தி வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். நேற்று நடந்த திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ