திருமூர்த்தி அணையில் முடங்கிய சவாரியால் தரையில் படகு! தொடர்கதையான சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
உடுமலை: திருமூர்த்தி அணையில் நீண்ட காலமாக முடங்கியுள்ள படகு சவாரியை மீண்டும் செயல்படுத்த, தளி பேரூராட்சி மற்றும் சுற்றுலாத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். படகுகளை இயக்கி வந்த, மகளிர் சுய உதவிக்குழுவினரும் வருவாயின்றி பாதித்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வருவோர், பஞ்சலிங்க அருவிக்கு சென்று விட்டு, அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.அதன்பின்னர், பொழுதுபோக்க எவ்வித வசதிகளும் இல்லாதது பெரும்பாலான சுற்றுலா பயணியரை ஏமாற்றமடைய செய்கிறது. படகு சவாரி துவக்கம்
முன்பு, திருமூர்த்தி அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி சார்பில், 1990ல் படகு சவாரி துவக்கப்பட்டது. பின்னர், கடந்த, 2002ல், திருமூர்த்திமலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்த, மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் படகுகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது.அதன்படி, படகுத்துறையில், ஐந்து படகுகள் இயக்கப்பட்டு, பெரியவர்களுக்கு, 25 ரூபாய், சிறியவர்களுக்கு, 15 ரூபாய், நான்கு நபர் பயணிக்கும் கால்மிதி படகில் செல்ல அரைமணி நேரத்துக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.படகு சவாரி செல்ல சுற்றுலா பயணியரும் ஆர்வம் காட்டினர். அருகில் இருந்த மலைவாழ் கிராம பெண்களே படகுகளை இயக்கியதால், அவர்களுக்கு வருவாயும் கிடைத்து வந்தது.இந்நிலையில், கடந்த 2014ல் இருந்து படிப்படியாக ஒவ்வொரு படகாக, இயக்கம் நிறுத்தப்பட்டது. கடந்த, 2016ல், இருந்து படகு சவாரி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.பராமரிப்பு செலவினங்கள் குறித்து தளி பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தால், போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இயக்கப்படாமல் ஒரங்கட்டப்பட்ட, படகுகளும் பயன்படுத்த முடியாத நிலையில், பரிதாப நிலைக்கு மாறி, மாயமாகி வருகிறது. திருமூர்த்திமலையில் சுற்றுலா சார்ந்த கட்டமைப்புகள், நீண்ட காலமாக மேம்படுத்தப்படவில்லை.படகு சவாரியும் இல்லாததால், விடுமுறை காலங்களில் கூட சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. சுற்றுலா சார்ந்த வர்த்தகம் முற்றிலுமாக பாதித்துள்ளது.திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி துவக்கப்படும் என தளி பேரூராட்சி நிர்வாகத்தினர், மாவட்ட சுற்றுலாத்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அணையில் வலம் வந்த படகுகள், கரை ஒதுங்கி காணாமல் போனது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகமாவது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்காலிக தீர்வாக 'பெடலிங் போட்'களை மட்டுமாவது இயக்கினால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் பயன்பெறுவார்கள். இதர 'போட்'களையும் சுற்றுலாத்துறை நிதி வாயிலாக புதுப்பித்து, இயக்கினால், மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கும் வருவாய் கிடைக்கும்.நீண்ட காலமாக இப்பிரச்னை கண்டுகொள்ளப்படாமல் இருப்பதன் 'மர்மத்தை' கண்டித்தும் போராட்டத்தில் இறங்கவும், அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.