| ADDED : டிச 31, 2025 07:44 AM
வால்பாறை: பயன்பாட்டிற்கு வராத படகுசவாரியால், சுற்றுலாபயணியர் கடும் அதிருப்தியில் உள்ளனர். வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர். அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வியூ பாய்ண்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாஸ்தலங்களை, சுற்றுலாபயணியர் கண்டு ரசிக்கின்றனர். வால்பாறையில் தற்போது குளு குளு சீசன் நிலவி வரும் நிலையில், தொடர் விடுமுறையால் சுற்றுலாபயணியர் அங்கு அதிக அளவில் திரண்டு, சுற்றுலாஸ்தலங்களை கண்டு ரசிக்கின்றனர். ஆனால் நகரில் உள்ள நகராட்சி படகு இல்லம் பயன்பாட்டில் இல்லாததால், படகுசவாரியில் செய்ய முடியாமல் சுற்றுலாபயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'படகு சவாரியில் பயணம் செய்ய நபருக்கு கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் படகு இல்லத்தில் தற்போது பராமரிப்பு பணி தொடர்ந்து நடப்பதால், படகுசவாரி செல்ல தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் வழக்கம் போல் படகு சவாரி செய்ய சுற்றுலாபயணியர் அனுமதிக்கப்படுவார்கள்' என்றனர்.