உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.எச்.,ல் தாயால் கைவிடப்பட்ட குழந்தை! அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

ஜி.எச்.,ல் தாயால் கைவிடப்பட்ட குழந்தை! அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

பொள்ளாச்சி; குழந்தையை வேண்டாம் என தாய் கூறியதால், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு, 23 வயது மதிக்கத்தக்க பெண் பிரசவத்துக்காக வந்தார். அவரை வழக்கம் போல டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். கடந்த, 30ம் தேதி, அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த தகவலை கூறிய செவிலியர்களிடம், சில நிமிடம் கழித்து அந்த பெண், குழந்தை எனக்கு வேண்டாம் எனக்கூறியுள்ளார். இது குறித்து செவிலியர்கள், டாக்டர்களிடம் தெரிவித்தனர்.டாக்டர்கள், செவிலியர்கள் அந்த பெண்ணிடம் குழந்தை வேண்டாம் என உறுதிப்படுத்தி, போலீசார் முன்னிலையில் கடிதம் வாங்கினர். அதன்பின் கடந்த, 1ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பினர்.இது குறித்து, கோவை மாவட்ட குழந்தைகள் அலகுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். கடந்த, 10 நாட்களாக மருத்துவமனை நிர்வாக பராமரிப்பில் குழந்தை இருந்தது.குழந்தைகள் நலப்பிரிவு முதன்மை டாக்டர் செல்வராஜ், டாக்டர் அமுதா மற்றும் செவிலியர் மஞ்சுளா உள்ளிட்ட செவிலியர்கள் பராமரித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று பெற்றோரால் கைவிடப்பட்ட ஆண் பச்சிளங்குழந்தையை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.பிறந்த குழந்தையை வேண்டாம் என தாய் கூறியதும், மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் செயல் பாராட்டுக்குரியது என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

3 மாதத்தில், 3 குழந்தைகள்!

அரசு மருத்துவமனையில், பிரசவிக்கும் குழந்தை வேண்டாம் எனக்கூறி ஒப்படைத்து செல்கின்றனர். இது கடந்த, மூன்று மாதம் தொடர்ச்சியாக, மூன்று குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்தாண்டு, இந்த குழந்தையும் சேர்த்து எட்டு குழந்தைகள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை