உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்கத்தை...  நிரந்தரமாக்க வேண்டும்! ரயில்வே அதிகாரிகளுக்கு பயணியர் கோரிக்கை

கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்கத்தை...  நிரந்தரமாக்க வேண்டும்! ரயில்வே அதிகாரிகளுக்கு பயணியர் கோரிக்கை

பொள்ளாச்சி: கோவை - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி வழியாக பாலக்காடு, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த, 2008ம் ஆண்டு அகல ரயில் பாதை பணிக்காக ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. பணி நிறைவடைந்த பின், கடந்த, 2015ல் மீண்டும் ரயில்சேவை துவங்கப்பட்டது. ஆனால், மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கவில்லை. இந்நிலையில், திருவனந்தபுரம் - மதுரை இயக்கப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரத்துக்கு நீட்டித்து ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இச்சூழலில், கோவை - ராமேஸ்வரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் ஒரு நாள் மட்டும் இயக்க அனுமதி வழங்கியுள்ளது. இதை நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது: பொள்ளாச்சி வழியாக, பாலக்காடு, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட கோவை - ராமேஸ்வரம் ரயில் மீண்டும் இயக்க வேண்டுமென பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது, ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் ஒரு நாள் மட்டும் இயக்க அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில், கோவையில் இரவு, 8:35 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு, 9:00 மணிக்கு வருகிறது. உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. பல ஆண்டு கால போராட்டத்துக்கு பின் இயக்கப்படும் இந்த ரயில், நிரந்தரமாக இயக்கப்பட வேண்டும். மீட்டர் கேஜ் காலத்தில் தொடர்ந்து இயக்கப்பட்ட இந்த ரயில் மீண்டும் இயக்கினால் பயணிகளுக்கு பயனாக இருக்கும். தெற்கு ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் கூறியதாவது: தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டம் ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் சென்னையில் நடந்தது.அதில், வடகோவை ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து செல்லும் ரயில்கள் நிறுத்தினால் கோவை ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசல் குறையும். பொள்ளாச்சியில் இருந்து இரவு, 8:50 மணிக்கு கிளம்பும் பயணியர் ரயில், இரவு 8:15 மணிக்கு கிளம்பினால், 9:30மணிக்கு கோவை வந்தடைந்து, நீலகிரி, சேரன் ரயில்களை பிடிக்க பயணியருக்கு வசதியாக இருக்கும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது, கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பொள்ளாச்சி வழியாக ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் தற்காலிகமாக இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த ரயிலை நிரந்தரமாக்கி, கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது, கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி!

எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில்:கோவை - ராமேஸ்வரம் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் இயக்குவதற்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முயற்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, ராமநாதபுரம் பகுதி பயணியர், யாத்ரீகர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த ரயில் நிரந்தர ரயிலாக நீண்ட காலத்துக்கு இயக்க வேண்டும். அப்போது தான், கோவை, பொள்ளாச்சி, பழநி, மதுரை, ராமேஸ்வரம் ஆன்மிக தலங்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வர முடியும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ