மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரர்கள் மாஸ்
கோவை; ஹரியானாவில் நடக்கும் தேசிய 'மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்' போட்டியில் கோவை வீரர், வீராங்கனைகள், 10 பதக்கங்கள் குவித்து பெருமை சேர்த்துள்ளனர்.ஹரியானா மாநிலத்தில், தேசிய அளவிலான 'மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்' போட்டி கடந்த, 28 முதல் நடந்து வருகிறது; இன்று நிறைவடைகிறது. தமிழகத்தில் இருந்து, 11 மாணவர்கள், ஏழு மாணவியர் என, 18 பேர் அடங்கிய அணியினர் பங்கேற்றுள்ளனர்.முதல் நாளில், 14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான, 'டைம் டிரையல்' போட்டியில், வீராங்கனைகள் ஸ்மிருதி தங்கம் பதக்கமும், சன்மிதா வெண்கலமும், மாணவர்கள் பிரிவில், நரேன் ஆதர்ஷ் வெண்கலமும் வென்றுள்ளனர்.அதேபோல், 16 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், சவுபர்னிகா வெள்ளியும், மாணவர்கள் பிரிவில் ரமணி வெள்ளியும் வென்றுள்ளனர்.மறுநாள் நடந்த 'மாஸ் ஸ்டார்ட்' போட்டியில், 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் ஸ்மிருதி தங்கம் வென்றார்; சன்மிதா வெண்கலம் வென்றார்.மாணவர்கள் பிரிவில், நரேன் ஆதர்ஷ் வெண்கலமும், 16 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் சவுபர்னிகா வெள்ளியும், ஹாசினி வெண்கலமும், மாணவர்கள் பிரிவில் ரமணி வெள்ளி பதக்கமும் வென்றனர். இதுவரை, 11 பதக்கங்கள் தமிழக அணி குவித்துள்ளது.இவற்றில், 10 பதக்கங்களை கோவை வீரர், வீராங்கனைகள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, போட்டிகள் நடந்துவரும் நிலையில், வெற்றி பெற்றவர்களை, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் மற்றும் கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.