கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த தகவல்கள் சேகரிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஒவ்வொரு ஒன்றியத்திலும், 100 கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு, வளைகாப்பு நடத்தப்படவுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஏழ்மை நிலையில் உள்ள, நுாறு கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது.இதற்காக அங்கன்வாடி பணியாளர்கள் வாயிலாக, கர்ப்பிணிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டும் வருகிறது.அதிகாரிகள் கூறியதாவது:வளைகாப்பின் போது, அங்கன்வாடி ஊழியர்கள், உறவினர்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்து சென்று, கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, நலுங்கு வைத்து, ஆசி வழங்குவர். மேலும், கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய உணவுகள், தேவையான ஊட்டசத்துகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்பு குறித்து விளக்கப்படும்.கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஐந்து வகையான உணவு விருந்து வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு, கூறினர்.