உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காத்தோட போச்சு கலெக்டரின் உத்தரவு! விவசாயிகள் உயர்த்துகின்றனர் போர்க்கொடி

காத்தோட போச்சு கலெக்டரின் உத்தரவு! விவசாயிகள் உயர்த்துகின்றனர் போர்க்கொடி

கோவை : கலெக்டரின் உத்தரவை மீறியும், விவசாயிகளின் அனுமதியின்றியும், விவசாய விளை நிலங்களில் உயர்மின்கோபுரங்களை (மின்சார டவர்) மின்வாரியம் அமைத்து வருவதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோவை காருண்யா நகரில், மின்வாரியம் சார்பில், துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, கோவை -சிறுவாணி சாலையிலுள்ள மாதம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து, காருண்யா நகர் வரை, உயர்மின் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.இதற்காக, மாதம்பட்டியிலிருந்து காருண்யா நகர் வரை, 56 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக, மாதம்பட்டியிலிருந்து காருண்யா நகரை நோக்கி போளுவாம்பட்டி வரை, 26 உயர் மின் கோபுரங்களை, விவசாய விளைநிலங்களுக்கு மத்தியிலும், நொய்யல் ஆற்றுப்படுகையை ஒட்டியும், மின்வாரியத்தினர் அமைத்துள்ளனர்.இதற்கு, விவசாய விளைநிலங்களின் உரிமையாளர்களிடமோ, நொய்யல் ஆற்றுப்படுகையை பராமரித்து வரும் பொதுப்பணித்துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடமோ, மின்வாரியம் அனுமதி பெறவில்லை.

கலெக்டர் கறார் உத்தரவு

கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், இது தொடர்பாக விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் பதிலளித்த போது, 'உயர் மின் வழித்தடங்களுக்காக உயர்மின்கோபுரங்களை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடத்திலோ, விவசாயவிளை நிலங்களிலோ அமைக்கும் பட்சத்தில், அதன் நிர்வாகிகள் அல்லது உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்; கட்டாயம் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும்' என்றார்.

ஆர்.டி.ஐ.,கேள்விகள்

இச்சூழலில், கோவை டாடாபாத்திலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் (பொதுகட்டுமானம்) கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் கந்தசாமி, 'எந்தெந்த விவசாய நிலங்களில், உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகிறது, இது தொடர்பாக விவசாயிகளுக்கு, அறிவிப்போ நோட்டீசோ வழங்கியிருக்கிறீர்களா' என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டிருந்தார்.

அனுமதி பெறவில்லை

அதற்கு மின்வாரியம் அளித்த பதிலில், 'உயர்மின் கோபுரம் அமைக்கப்படும் போதுதான், எந்தெந்த விவசாய நிலத்தில் அமைக்கப்படும் என்று எங்களுக்கே தெரியும். அதன் பின்பு தான், விவசாயிகளுக்கு தகவல் தெரிவிப்போம். இதுவரை அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களுக்கு, விவசாயிகளிடம் அனுமதி பெறவில்லை' என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கோர்ட்டுக்கு செல்வோம்'

இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி கூறியதாவது:விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலத்தில், மின்வாரியம் உயர்மின்கோபுரம் அமைப்பதற்கான தகவலை தெரிவிப்பதில் என்ன சிரமம் உள்ளது? இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் ஏற்கனவே மின்வாரியத்தினருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.கலெக்டரின் உத்தரவை மீறுவதோடு, விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், இது போன்று செய்வது தவறு என்பதை, மின்வாரியம் இதுவரை உணரவில்லை. தன்னிச்சையாக நடந்து கொள்கிறது. அதனால் முறையாக அனுமதி பெற்று, அதன் பின் இத்திட்டத்தை மின்வாரியம் தொடரட்டும். அதுவரை இத்திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம். கோர்ட்டை நாடப்போகிறோம்.இவ்வாறு, கந்தசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை