போட்டித்தேர்வு; மாணவர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்
உடுமலை: குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன், வனத்துறை அதிகாரிகள் கலந்துரையாடி, போட்டித்தேர்வுகளுக்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடுமலை குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளிக்கு, இந்திய வனத்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் குழுவினர் வருகை தந்தனர். வன உயிரினங்கள் மட்டுமல்லாது பொது சேவை, ஒழுக்கம் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குறித்து மாணவர்களிடையே பேசினர். உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், சமுதாயத்தில் சேவையாற்றவும், தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவித்தனர். கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினர்.