டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்; விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகராட்சி
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரப்பகுதிகளில், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் வாயிலாக, டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் வார்டுகளுக்கு நேரிடையாக சென்று கொசுக்களை கட்டுப்படுத்தவும், டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொசுக்கள் வாயிலாக, டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இந்நோய் பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே முட்டையிட்டு, ஒரு வார காலத்தில் பெருகின்றன. இவற்றின் வாயிலாக நோய் பரவுகின்றன.எனவே, டெங்கு பரவலை தவிர்க்கும் பொருட்டு, வாரம் ஓர் முறை நீர் சேமிப்பு கலன்கள், தொட்டிகள், இதர நீர் தேங்கும் இடங்களில், பிளீச்சிங் பவுடர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். நீர் தேங்கியுள்ள இடங்களில், 'அபேட்' எனப்படும், 'டெமிபாஸ்' என்ற கெமிக்கல் ஊற்றுவதின் வாயிலாக கொசுப்பெருக்கத்தை தவிர்க்கலாம்.தொட்டிகள், ஏ.சி., குளிர்சாதன பெட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள், ஆட்டுக்கால் போன்றவற்றில் நீர் தேங்காமல் பொதுமக்கள் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.சுகாதாரக்குழு வாயிலாக கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 86 பேர் சிறப்பு டெங்கு தடுப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்கின்றனர்.கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்கப்படுகிறது. நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு, பொதுமக்கள், நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர். அலட்சியம் வேண்டாம்!
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழை நோய்க்கான காய்ச்சல், டெங்கு, சிக் குன் குன்யா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். கைகளை கழுவுதல் உள்ளிட்டவை கடைப்பிடிக்க வேண்டும்.குப்பபையை தரம் பிரித்து பணியாளர்களிடம் ஒப்படைத்தல், சளி மற்றும் இருமல் இருந்தால், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.காய்ச்சல் பாதிப்பு இருந்தால், வடுகபாளையம், காமாட்சி நகர் பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை, நகராட்சி சித்தா மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சைக்கு அணுக வேண்டும்.இவ்வாறு, கூறினார்.