உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் நுழைவதில் சிரமம்

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் நுழைவதில் சிரமம்

மா நகராட்சி மத்திய மண்டலம், 31வது வார்டு, கணபதி அருகே ராஜிவ்காந்தி ரோடு, பதிகவுண்டர் தோட்டம், காமராஜபுரம், பெரியசாமி லே-அவுட், சம்பத் வீதி உள்ளிட்ட இடங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் குப்பை பிரச்னை பிரதானமாக உள்ளது. தவிர, ஆங்காங்கே ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஒத்த புளியமரம் அருகே மணியகாரம்பாளையம் செல்லும் ரோட்டின் பக்கவாட்டில் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ரத்தினபுரி, சம்பத் வீதியில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சங்கனுார் ஓடையை கடந்து ஆறு அடி அகலம் கொண்ட பாலம் செல்கிறது. குறுகிய பாலத்தில், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களால் மருத்துவ சேவை பெறமுடியாது அப்பகுதி மக்கள் தவிக்கின்றனர். சங்கனுார் ரூட்ஸ் ரவுண்டானாவில் இருந்து குட்டை பகுதி வழியாக ராஜிவ்காந்தி சாலையை இணைக்கும் வழித்தடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. உப்பு தண்ணீர் விக்ரம் (தனியார் நிறுவன ஊழியர்): ஏழை, எளிய மக்கள் குடியிருக்கும் காமராஜபுரத்தில் உப்புத் தண்ணீர் வசதி இல்லாததால் அருகே நடந்துசென்று தண்ணீர் கொண்டுவர வேண்டியுள்ளது. இங்கு பெரியவர்கள் அதிகம் உள்ள நிலையில் நடந்துசென்று தண்ணீர் எடுத்துவர சிரமப்படுகின்றனர். மழை காலத்தில் சிரமம் ஜெயச்சந்திரன்: பதிகவுண்டர் வீதியில் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் செல்கிறது. பெரும்பாலான வீதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பதிகவுண்டர் வீதியில் பாதி பகுதியில் மழைநீர் வடிகால் புனரமைக்கப்படாததால் இப்பிரச்னை ஏற்படுகிறது. பிரச்னையும்; தீர்வும்! 'ராஜிவ்காந்தி ரோட்டில் இருந்து மணிய காரன்பாளையம் செல்லும் ரோட்டில் பக்கவாட்டில் சாக்கடை வசதி இல்லாமல் இருந்தது. இந்த ரோடு ஆக்கிரமிப்பு காரணமாக, 10 அடி அகலத்துடன் சுருங்கி இருந்தது. வாகன ஓட்டிகள் பெரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையுடன், விபத்துகளையும் சந்தித்து வந்தனர். இந்நிலையில், 500 மீ.,க்கு ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டு, 10 அடி மேலும் அகலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது. எட்வின் நகர், பாலாஜி லே-அவுட், சுப்பிரமணிய நகரில் மழைநீர் வடிகால் இல்லாததால், மழை சமயத்தில் தண்ணீர் வீடுகளுக்குள் பெருக்கெடுத்தது. தற்போது, மழைநீர் வடிகால் கட்டி கால்வாயுடன் இணைத்துள்ளதால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. காமராஜபுரம் சமுதாயக்கூடம் தற்போது, ரூ.14.85 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி நிதியில் கூடுதல் கழிப்பிடம், உணவு அருந்தும் அறை கட்டி சமுதாயக்கூடம் முழுவதும் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது' என்கிறார் கவுன்சிலர் வைரமுருகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ