உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்; 298 பேரை கைது செய்த போலீசார்

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்; 298 பேரை கைது செய்த போலீசார்

-- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த, 298 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மறியல் போராட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். சங்கத்தின் பொள்ளாச்சி வட்ட தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் விஜயராகவன், இளையராஜா, தாஸ் கனகராஜ், ரவி, மாரியப்பன் பேசினர். சி.பி.ஐ.எம்., கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் துரைசாமி, பட்டீஸ்வர மூர்த்தி, செல்வமூர்த்தி பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், அண்டை மாநிலங்கள் போல மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்துக்கு, 6,000 ரூபாயும், கடும் ஊனத்துக்கு, 10,000 ரூபாயும் வழங்க வேண்டும்.நுாறு நாள் வேலையில், 100 நாளும் வேலை வாய்ப்பும், நான்கு மணி நேர இலகுவான வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.போராட்டத்தில் ஈடுபட்ட, 80 ஆண்கள், 42 பெண்கள் என மொத்தம்,122 பேரை போலீசார் கைது செய்து, மீனாட்சி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

உடுமலை

உடுமலையில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த, சிறை நிரப்பும் போராட்டத்துக்கு, தாலுகா செயலாளர் மாலினி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள், முத்துக்குமார், குருசாமி, அழகர்சாமி, ஆறுமுகம், பாலசுப்ரமணி, கருப்புச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட, 176 பேரை, உடுமலை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !