அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பலத்தை முறியடிக்க தி.மு.க., வியூகம் பகுதி கழகங்களை பிரித்து கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்
கோவை : அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பலத்தை முறியடித்து, 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக, கோவை மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் உள்ள பகுதி கழகங்கள் பிரிக்கப்பட்டு, புதிய பகுதிகள் தோற்றுவிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை லோக்சபா தொகுதியில், 1.18 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 4.50 லட்சம் ஓட்டுகள் பெற்று, இரண்டாமிடம் பெற்றார். என்றாலும் கூட, கோவை தெற்கு, வடக்கு மற்றும் சிங்காநல்லுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில், தி.மு.க.,வை விட பா.ஜ.,வுக்கு அதிகமான ஓட்டுகள் பதிவாகியிருந்தன. குறிப்பாக, எம்.பி., ராஜ்குமார் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் வசிக்கும் ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டு விழுந்திருந்தது. மொத்தம், 492 ஓட்டுச்சாவடிகளில் தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளியிருந்தது. கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., - 41.74 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது. பா.ஜ., - 33.07 சதவீதம், அ.தி.மு.க., - 17.37 சதவீத ஓட்டுக்களை பெற்றிருந்தன. தற்போது அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்திருக்கிறது. அவ்விரு கட்சிகளும் பெற்ற ஓட்டுகளை சேர்த்தால், 50.44 சதவீதம் வருகிறது. இதன்படி பார்த்தால், 8.7 சதவீதம் தி.மு.க.,வுக்கு குறைவு. அதனால், வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எளிதாக இருக்காது என்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க., - பா.ஜ., பெற்ற ஓட்டுக்கள், தி.மு.க., பெற்ற ஓட்டுக்களை தி.மு.க.,வினர் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். தேர்தலுக்கு தயாராக அதிக ஓட்டுள்ள வார்டுகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, பகுதி கழகங்கள் பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.,வில் இதற்கு முன், 20 பகுதி கழகங்கள் இருந்தன; தற்போது, 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. சிங்காநல்லுார் தொகுதிக்கு, 10, கோவை வடக்கிற்கு - 9, கோவை தெற்கிற்கு, 8 பகுதி கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வடக்கு மாவட்ட தி.மு.க.,வில், 16 பகுதி கழகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குனியமுத்துார், சுகுணாபுரம் இணைத்து மூன்று பகுதிகளாகவும், செல்வபுரம், கரும்புக்கடை இணைத்து மூன்று பகுதிகளாகவும், துடியலுார், சரவணம்பட்டி, காளப்பட்டி, ஆர்.எஸ்.புரம் பகுதிகள் இரண்டாகவும், காரமடை கிழக்கு, மேற்கு ஒன்றியம் நான்காகவும், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு, மேற்கு ஒன்றியம் மூன்றாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பகுதி கழக பொறுப்பாளர்களாக, கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
லெவல்'
பகுதி கழக பொறுப்பாளர்கள் சிலர் கூறுகையில், 'சட்டசபை தேர்தலை 'மைக்ரோ' அளவில் எதிர்கொள்ள, வார்டுகள் மற்றும் பகுதி கழகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது பகுதி கழகங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இனி, வார்டுகளுக்கு நியமிக்கப்படுவர். ஒரு பகுதி கழகத்துக்கு இரண்டு அல்லது மூன்று வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும், 30 ஆயிரம் ஓட்டுகளுக்கு பொறுப்பு' என்றனர்.