உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோரம் அமர்ந்து சாப்பிடக்கூடாது; வனத்துறை எச்சரிக்கை

சாலையோரம் அமர்ந்து சாப்பிடக்கூடாது; வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிடக்கூடாது என மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊட்டி மற்றும் கோத்தகிரிக்கு செல்லும் சாலைகள் உள்ளன. தற்போது கோடை விடுமுறையையொட்டி, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வரும் நிலையில், இச்சாலையோரம் உணவு சாப்பிட்டு விட்டு, குப்பைகளை வனப்பகுதியில் வீசி செல்ல வாய்ப்புள்ளது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள சாலையோரங்களில் ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்லும் சுற்றுலா பயணிகள், அமர்ந்து சாப்பிடுகின்றனர். சிலர் பீடி, சிகரெட் போன்றவைகளை பிடிக்கின்றனர். அவர்கள் பிடித்துவிட்டு சிகரெட் துண்டுகளை வீசி சென்றால், அதில் உள்ள தீ கங்குகள் வாயிலாக வனத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல் சாப்பிட்டு விட்டு மீதமான உணவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கவர்களை வீசவும் வாய்ப்புள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி சாப்பிடக்கூடாது. மேலும், குரங்கு, மான் போன்ற வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது. இப்படி செய்வதால் அந்த விலங்குகள் சாலைக்கு வரும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்க நேரிடும். இத்தகைய செயலில் சுற்றுலா பயணிகள் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை