வீதிகளில் குப்பையை கொட்டாதீங்க! நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
வால்பாறை ; வால்பாறையில், குப்பையை வீதிகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.வால்பாறையில், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகரை சுகாதாரமான முறையில் மாற்றியமைக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகரில் பழைய குப்பை தொட்டிகள் முழுவதுமாக அகற்றி, வீடு தோறும் துாய்மை பணியாளர்கள் நேரடியாக குப்பையை சேகரித்து வருகின்றனர். மேலும் குப்பையை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் நடக்கிறது.இந்நிலையில், வால்பாறையில் சில இடங்களில் பொதுமக்கள் திறந்தவெளியில் குப்பையை வீசி செல்கின்றனர். குறிப்பாக, சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான, வாழைத்தோட்டம் ஆற்றில் குப்பையை வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதே போல், வால்பாறை நகரில் பல இடங்களில் திறந்தவெளியில் குப்பையை மக்கள் வீசி செல்கின்றனர்.இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை நகராட்சியில், வீடு மற்றும் கடைகளில் நாள் தோறும் காலை நேரத்தில் துாய்மை பணியாளர்கள் நேரடியாக சென்று, குப்பையை பெறுகின்றனர்.இந்நிலையில், அண்ணாநகர், கலைஞர் நகர், காமராஜ்நகர், கக்கன் காலனி, வாழைத்தோட்டம், டோபிகாலனி உள்ளிட்ட ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள், வீடுகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்காமல், ஆற்றோரத்திலும், திறந்த வெளியிலும் விசுகின்றனர்.இதனால் அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, குப்பை உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இதை மீறுவோருக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். வால்பாறை நகரை சுகாதாரமான முறையில் பராமரிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்புதர வேண்டும்.இவ்வாறு, கூறினர்.