டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கோவை: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ)., நாளைய உலகில் பிரகாசிக்கும்; அதற்கு ஏற்ற வகையில் கல்வி முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், என, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் ராஜிவ் குமார் பேசினார்.கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரியின் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, என்.ஜி.பி., கல்வி அறக்கட்டளை தலைவர் நல்ல ஜி பழனிசாமி தலைமை வகித்தார். முதல்வர் பிரபா ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் தவமணி முன்னிலை வகித்தார்.விழாவில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் ராஜிவ்குமார் பேசுகையில், இந்தியாவின் முக்கிய துறைகளிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் கோவையை சேர்ந்த கல்லுாரிகளில் படித்தவர்கள் பணியாற்றுவது பெருமை அளிக்கிறது. அதேசமயம், உயர்ந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., போன்றவைகளில் படித்தவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். கல்வி, ஒரு ஆயுதம். அதை சரியாகவும், முறையாகவும் பயன்படுத்தினால் நாடு முன்னேறும். எதிர்வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), இல்லாத துறைகளே இருக்காது. பிரகாசமாக உள்ள இந்த துறை சார்ந்த படிப்புகளையும், கல்வி முறைகளிலும் கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.விழாவில், பட்டங்களை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் ராஜிவ்குமார் வழங்கினார். என்.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி நடேசன் நன்றி தெரிவித்தார்.