ரோட்டோரத்தில் கிடப்பில் போடப்பட்ட மின்கம்பங்கள்
நெகமம்: நெகமம், ஜக்கார்பாளையம் செல்லும் ரோட்டோரத்தில், மின்கம்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றை மின்வாரிய அலுவலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டம் நெகமம், ஜக்கார்பாளையம் செல்லும் வழித்தடத்தில், காற்றாலைகள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில், ரோட்டோரத்தில், பழைய மற்றும் புதிய மின்கம்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்துடன் பழைய இரும்பு கம்பங்களும் கிடக்கிறது. இப்பகுதியில், முறையான மின்விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகளும் இல்லை. இதனால், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாரேனும் இந்த மின்கம்பத்தில் பாகங்களை எடுத்து செல்ல வாய்ப்புள்ளது. அப்பகுதி வழியாக வரும் பொதுமக்களுக்கும், ஆபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, மின்வாரியத்தினர் இங்கு கிடப்பில் போடப்பட்ட மின்கம்பங்கள் எடுத்து சென்று, மின்வாரிய அலுவலகத்திலோ அல்லது மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்திலோ இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.