இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால் யானைகள் வருவது கூட தெரிவதில்லை! தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
வால்பாறை; வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், எஸ்டேட் பகுதியில் கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. நகரில் ஐந்து உயர்கோபுர மின்விளக்குகளும், முடீஸ், சோலையார்பஜார், கவர்க்கல், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, ரொட்டிக்கடை, அய்யர்பாடி, கருமலை, அக்காமலை உள்ளிட்ட பகுதிகளில் மினி உயர்கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.இது தவிர, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 2,936 தெருவிளக்குகள் நகராட்சி பராமரிப்பில் உள்ளன. இந்நிலையில், இரவு நேரத்தில் யானை, புலி, காட்டுமாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளன.எஸ்டேட் பகுதியில் பெரும்பாலான தெருவிளக்குகள் இரவு நேரங்களில் எரியாததால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் மனித - வனவிலங்கு மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சி சார்பில், நகர் பகுதியில் மட்டுமே அதிக அளவு வளர்ச்சிப்பணிகள் நடக்கிறது. தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர தயக்கம் காட்டி வருகிறது.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. தெருவிளக்கு வசதி முழுமையாக ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.இதனால், இரவு நேரத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது கூட தெரியாத நிலையில், உயிருக்கு பயந்து வாழ வேண்டியுள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள தெருவிளக்குகளை உடனடியாக சீரமைத்து, கூடுதலாக மினி உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.