உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவசரமாக முடிந்தது அவசர கூட்டம்! 5 நிமிடங்களில், 26 தீர்மானங்கள் பாஸ்

அவசரமாக முடிந்தது அவசர கூட்டம்! 5 நிமிடங்களில், 26 தீர்மானங்கள் பாஸ்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில் அவசர கூட்டம், ஐந்து நிமிடங்களிலேயே விவாதங்கள் ஏதுமின்றி நிறைவடைந்தது.பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த, 30ம் தேதி சாதாரண கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற 17 தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., - 3, சுயே., - 1 உள்ளிட்ட கவுன்சிலர்கள், ஆட்சேபனை கடிதம் வழங்கி வெளிநடப்பு செய்தனர். இதனால், தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமலே கூட்டம் முடிவுக்கு வந்தது.தி.மு.க., கவுன்சிலர்கள், 'வார்டுகளில் எந்த பணிகளும் நடப்பத்தில்லை; டெண்டர் விட்டாலும் எந்த பணிகளும் நடக்கவில்லை,' என குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, தொகுதி பொறுப்பாளர், எம்.பி., மற்றும் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்களுடன் பேச்சு நடத்தி,குறைகளை கேட்டறிந்தனர். ஒவ்வொரு கவுன்சிலரையும் தனித்தனியாக அழைத்து பேசினர். அதன்பின், ஒட்டுமொத்தமாக கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்டோர் சமரசமாக செல்ல அறிவுறுத்தி, தீர்மானங்களை நிறைவேற்றித்தர கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.நேற்றுமுன்தினம், கவுன்சிலர்கள், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் இடையூறு செய்வதாகவும், பணியை நிம்மதியாக செய்ய முடியவில்லை என நகராட்சி அதிகாரிகள், கமிஷனர் கணேசனிடம் முறையிட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையே, அதிகாரிகள் புகார் குறித்து, எம்.பி.,யிடம் கவுன்சிலர்கள் முறையிட்டனர். அதிகாரிகளின் பணியில் எந்த கவுன்சிலர் அல்லது பெண் கவுன்சிலரின் கணவர் தலையிடுகிறார் என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டுமென, வலியுறுத்தினர்.இந்நிலையில், நேற்று அவசர கூட்டம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு கூட்டம் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு சில கவுன்சிலர்கள் மட்டுமே வந்த நிலையில், 11:30 மணிக்கு மேல் தான் பெரும்பான்மை கவுன்சிலர்கள் வர துவங்கினர்.தொடர்ந்து, எம்.பி., ஈஸ்வரசாமி, நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் கணேசன் மற்றும் அதிகாரிகள் வந்தனர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதுடன், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.அதன்பின், எம்.பி.,யை தலைவர் வரவேற்று பேசியதும், கவுன்சிலர்கள் கைதட்டி வரவேற்றனர். தொடர்ந்து, தீர்மானங்களின் எண் படிக்கப்பட்டு, 26 தீர்மானங்களும் 'பாஸ்' செய்யப்பட்டதும், கூட்டம் நிறைவடைந்ததாக கவுன்சிலர்கள் வெளியே சென்றனர்.எம்.பி., பேசக்கூட வாய்ப்பு வழங்காமல், கூட்டம் துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. கடந்த முறை ஆட்சேபனை கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இம்முறை கூட்டம் விறுவிறுப்பாக நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், கவுன்சிலர்கள் மவுனமாக தீர்மானங்களை நிறைவேற்றி சென்றதால் சுவாரஸ்யம் இல்லாமல் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை