உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்வழியை பாதுகாக்க எல்லை கற்கள் நடுங்க; கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

நீர்வழியை பாதுகாக்க எல்லை கற்கள் நடுங்க; கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை; கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அதில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரங்கநாதன் பேசியது: கவுசிகா நதி பருவ கால நதி; நிலத்தடி நீர் மட்டம் செறிவூட்டப்படும். அதை நம்பி கோவை வடக்கு கோட்டத்தில் 6,000 விவசாயிகள் உள்ளனர். கணுவாயை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து துவங்கும் கவுசிகா நதி, கோவை வடக்கு கோட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களையும், விவசாய நிலங்களையும் வாழ வைக்கிறது. துடியலுார் சர்வே எண் 298க்கு அருகே 60 அடி அகலம் உள்ள கவுசிகா நதி நீர்வழிப்பாதையில், 30 அடியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, கிராவல் மண்ணால் நிரப்பி, சாலையாக மாற்றியுள்ளார். காம்பவுண்ட் சுவர் அமைத்து, லே-அவுட்டுக்குச் செல்ல வழிப்பாதையாக மாற்றி விட்டார். நதிநீர் வழிமாறி, வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் விவசாய விளைநிலம், குடியிருப்புக்குள் செல்லும் அபாயம் உள்ளது. கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுசிகா நதி செல்லும் நீர் வழித்தடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு உருவாகாத வகையில், எல்லைக்கற்கள் நட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். காரமடை பகுதி விவசாயிகள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இரவு நேரத்தில் தொடர் திருட்டு நடக்கிறது. திருடர்களை பிடிக்க, போலீசார் இரவு நேர ரோந்தை துரிதப்படுத்த வேண்டும்' என்றனர். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''வனவிலங்கு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. அவற்றை அகற்ற வேண்டும்,'' என்றார். கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி காளிச்சாமி பேசுகையில், ''சின்னவேடம்பட்டி குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து நிரப்புவதை கைவிட வேண்டும். விவசாயிகளின் கருத்தை மதிக்காமல் மாநகராட்சி தன்னிச்சையாக திட்டத்தை செயல்படுத்துவதை கைவிட வேண்டும். இதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்,'' என்றார். பட்டா, மின் இணைப்பு பெயர் மாற்றம், நிலஅளவை உள்ளிட்ட பணிகளுக்கான கோரிக்கை மனுக்களை விவசாயிகள் கோட்டாட்சியரிடம் வழங்கினர். விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை