உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்ரி ஸ்டாக் விபரங்கள் பதிவதில் குளறுபடி; சரி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

அக்ரி ஸ்டாக் விபரங்கள் பதிவதில் குளறுபடி; சரி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி; 'அக்ரி ஸ்டாக்' எனப்படும், விவசாயிகள் பதிவேடுகளில் (பார்மர் ரிஜிஸ்டர்) பதிவு செய்யும் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் அனைத்துத் தகவல்களையும் டிஜிட்டல் தரவுகளாக பதிவு செய்ய, விவசாயிகள் பதிவேடு (பார்மர் ரிஜிஸ்டர்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, வருவாய் கிராமம் தோறும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.'விவசாயிகள் பதிவேடு' அல்லது அக்ரி-ஸ்டாக் எனப்படும் இத்திட்டத்தில், பதிவு செய்வதன் வாயிலாக, விவசாயிகள் பல்வேறு அரசுத் துறைகளின் நலத்திட்டங்களை எளிதில் பெற முடியும். ஒவ்வொரு முறையும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டாலும், பதிவு செய்வதில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்ய, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:ஒரு விவசாயிக்கு பல கிராமங்களில் விவசாய நிலம் இருந்தாலும், ஒரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. தவறான சர்வே எண்ணுக்குப் பதிலாக, சரியான சர்வே எண் அல்லது விடுபட்ட புல எண்ணைச் சேர்க்க, இதில் வழிவகை இல்லை.புதிதாக வாங்கிய விவசாய நிலத்துக்கான, புல எண்ணைச் சேர்க்க வழிமுறை இல்லை. பதிவுகள் தவறாக செய்யப்பட்டு விட்டால், அதைத் திருத்த வகை செய்யப்படவில்லை. மேலும், கூட்டு பட்டாவாக இருந்தால், பதிவு செய்ய முடிவதில்லை.மேலும், கிராமத்தில் முகாம் நடக்கும் நாட்கள், முகாம் அலுவலர் குறித்த முறையான அறிவிப்பு இல்லை. இதுபற்றி வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், கிராமத்தில் இருக்கும் விவசாய குழுக்களிடம் தெரிவித்துள்ளோம் என்கின்றனர்.விவசாய குழுக்களில், 20 சதவீத விவசாயிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், பெரிய விவசாயிகளாகவும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ளனர். அவர்களின் நில ஆவணங்களை பதிவு செய்து கொள்கின்றனர். பெரும்பாலான சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த திட்டத்துக்கு பதிவு செய்வதை, அவர்கள் தெரிவிப்பதில்லை.மேலும், பதிவு செய்பவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்காததால், தடுமாற்றத்தில் உள்ளனர். இதுபோன்ற குறைகளை, வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !