யானையை இடம் மாற்றாத வனத்துறை; மனித உரிமை ஆணையத்தில் விவசாயிகள் புகார்
கோவை; 'காட்டு யானையை பிடித்து இடம் மாற்ற வேண்டும்; அதை செய்ய மறுக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு விவசாயிகள் மனு அனுப்பியுள்ளனர். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி அனுப்பிய மனு: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள், விவசாய விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிர்களையும், மனித உயிர்களையும் சேதப்படுத்தும் யானைகளை பிடித்து இடம் மாற்றம் செய்ய வேண்டிய கடமை, வனத்துறைக்கு உள்ளது. மதுக்கரையில், 2019ல் சின்னத்தம்பி மற்றும் விநாயகா என்ற இரு காட்டு யானைகளையும் வனத்துறையினர் பிடித்து, இடம் மாற்றியதால், மக்களும் விவசாயிகளும் நிம்மதியடைந்தனர். அதன் பின், கடந்த ஐந்தாண்டாக காட்டு யானைகளை இடம் மாற்றம் செய்ய வனத்துறை மறுத்து வருகிறது. விவசாயிகளும், மக்களும் பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியும் பலனில்லை. நடப்பாண்டு ஜன., 25ல் தடாகம் அருகே, பன்னீர்மடை தாளியூர் சாலையில் நடராஜன் என்ற விவசாயியை, வேட்டைய்யன் என்ற காட்டு யானை மிதித்துக் கொன்றது. ஏழு மாதமாக அந்த யானையை பிடித்து, வேறு வனப்பகுதியில் விட, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். கலெக்டரும், தலைமை வனப்பாதுகாவலருக்கு கடிதம் அனுப்பி விட்டார். ஆனாலும், யானையை இடம் மாற்றம் செய்ய, வனத்துறை மறுத்து வருகிறது. மனித உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாத, கடமையை செய்யத்தவறிய வனத்துறை அதிகாரி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கந்தசாமி கூறியுள்ளார்.