உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையத்தில் நான்கு வழிச்சாலை: ரூ. 235 கோடியில் திட்ட மதிப்பீடு தயார்

மேட்டுப்பாளையத்தில் நான்கு வழிச்சாலை: ரூ. 235 கோடியில் திட்ட மதிப்பீடு தயார்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை நகர் பகுதியில் உள்ள சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தவும், கோவை பூமார்க்கெட் முதல் கல்லாறு ரயில்வே கேட் வரை சாலை சீரமைப்பு, 9 புதிய சிறு பாலங்கள் அமைக்கவும், ரூ.235 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகரில், கோவை ---- மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் ---- ஊட்டி, மேட்டுப்பாளையம் ---- அன்னுார் சிறுமுகை -அண்ணாஜிராவ் உட்பட முக்கிய சாலைகள் உள்ளன. அதே போல், காரமடை நகர் பகுதியில் கன்னார்பாளையம், தோலம்பாளையம் சாலைகள் உள்ளன. நகர்பகுதியில் நான்கு வழிச்சாலை, ரவுண்டானா இல்லாததால், போக்குவரத்து நெரிசலில், மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகள் சிக்குகின்றன. சாலையோர ஆக்கிரமிப்புகளாலும் மக்கள் சிரமப்படுகின்றனர். இதையடுத்து, காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் நகர் பகுதிகளில் நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட சேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை பூமார்க்கெட் முதல் மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே, ரயில்வே கேட் வரையிலான கோவை ---மேட்டுப்பாளையம் சாலை, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலைகளில் சீரமைப்பு, நான்கு வழிச்சாலை இல்லாத இடங்களில் புதிதாக சாலை அமைத்தல், 8 சிறுபாலங்கள் புதிதாக அமைத்தல், பவானி ஆற்று பாலம் கூடுதலாக அமைத்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், நிலம் எடுப்பு என சுமார் ரூ.235 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் உள்ள சி.டி.சி., டிப்போ முதல் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தீம் பார்க் வரை, சுமார் 10 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே ஐந்து முக்கு பகுதியில் ரவுண்டானா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காரமடை நகர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை