இ சலான் பேரில் மோசடி; ஒரு மாதத்தில் 20 புகார்கள்
பொள்ளாச்சி; கோவை மாவட்ட போலீசார் அனுப்பும், 'இ சலான்' போல், போலி சலான் அனுப்பி மோசடி செய்ததாக, 20 புகார் பெறப்பட்டுள்ளது.டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், அது சார்ந்த சைபர் கிரைம் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. மோசடிகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு மோசடி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால், மோசடி நபர்கள் அடுத்த மோசடியை அரங்கேற்றத் துவங்குகின்றனர்.தற்போது, கோவை மாவட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு ஆன்லைன் வழியில் போலீசார் அபராதம் விதித்து, 'இ சலான்' வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்புகின்றனர். அபராதத்தை செலுத்த அரசு 'பரிவாகன்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்நடைமுறையை பின்பற்றி, போலீசார் அனுப்புவதை போலவே, போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.வாட்ஸ் ஆப்பில் மட்டுமே அனுப்பப்படும், இக்குறுஞ்செய்தியில் விதிமீறலில் ஈடுபட்டது போல், வாகனத்தின் புகைப்படம், இடம், நேரம், அபராத தொகை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும்.இத்துடன் அபராதம் செலுத்துவதற்கான போலி செயலிக்கான 'லிங்க்'கும் அனுப்பப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்ததும் வங்கியில் இருந்து பணம் திருடப்படுகிறது. தற்போது இதுகுறித்த புகார்கள் அதிகளவில் பெறப்படுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 புகார்கள் பெறப்பட்டன.கோவை சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'வாட்ஸ்ஆப்பில் வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி, லிங்க், அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் செயலிகளையும், பதிவிறக்கம் செய்யக்கூடாது. விழிப்புடன் இருந்தால் மட்டுமே பணம் பறிபோவதை தடுக்க முடியும்' என்றனர்.