கடன் வாங்கி தருவதாக ரூ.200 வசூலித்து மோசடி
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பெண்கள், மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: வடக்கிப்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த, இரண்டு பெண்கள், கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், கிராமம், கிராமமாக சென்று, மானியத்துடன் கடன் வாங்கி தருகிறோம். விதவை, கஷ்டப்படும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என யாராக இருந்தாலும் சொல்லுங்கள். மானியத்துடன், 5 - 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி தருகிறோம் என, தெரிவித்தனர். இதை நம்பி பணம் செலுத்தினோம். டோக்கனுக்கு, 200 ரூபாய் என தனியாக வசூலித்தனர். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை கடன் கிடைக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டாலும் போன் எடுப்பதில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.