உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணத்துக்கடவு நெ.10 முத்துார் கிராமத்தில் இடமிருக்கு மனமில்லை!பட்டா வழங்காததால் பயனாளிகள் அதிருப்தி

கிணத்துக்கடவு நெ.10 முத்துார் கிராமத்தில் இடமிருக்கு மனமில்லை!பட்டா வழங்காததால் பயனாளிகள் அதிருப்தி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நெ.10 முத்தூர் கிராமத்தில், மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம், 5 ஆண்டுகளாக அளவீடு செய்து, பட்டா வழங்காததால் பயனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மக்கள் பலர், முகாம்களில் விண்ணப்பம் கொடுக்கின்றனர். இதில், கடந்த 2018 -- 19ம் நிதியாண்டில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நெ.10 முத்தூர் கிராமத்தில், 1.03 ஏக்கர் நிலம் எடுப்பு செய்யப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும், 32 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த பயனாளிகளுக்கும் முறையாக அறிவிப்பு செய்யாததால், கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வீட்டு மனைப்பட்டா வேண்டி சென்ற போது, 32 குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது தெரியவந்தது. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கேட்டபோது முன்னுக்குபின் முரணாகவும், பட்டா வழங்கும் இடத்துக்கு வழித்தடம் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும், நெ.10 முத்தூர் பகுதி மக்கள் சிலருக்கு இந்த இடத்திற்கு பதிலாக, கோவிந்தாபுரம் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் இல்லாத பாறைகள் நிறைந்த பகுதியில், 27 நபர்களுக்கு தலா ஒரு சென்ட் இடத்திற்கான வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில், 7 நபர்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 2.79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டியுள்ளனர். இங்கு மொத்தமே, 16 வீடுகள் உள்ளது. இதில், 2 வீட்டில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மீதம் உள்ள வீடுகள் அனைத்தும் காலியாகவே உள்ளது. இதில், சில வீடுகள் கட்டுமான பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இங்கு சாலை, கழிப்பிடம், மேல்நிலை தண்ணீர் தொட்டி, வடிகால் போன்ற வசதிகள் இருந்தாலும், அரசு வழங்கிய இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் மக்கள் இங்கு வசிப்பதை தவிர்த்துள்ளனர். எனவே, நெ.10 முத்தூர் பகுதியில், 32 நபர்களுக்கு இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர். மக்கள் கூறியதாவது: நெ.10.முத்தூரில், தேர்வு செய்யப்பட்ட இடம் இதுவரை அளவீடு செய்யவில்லை. இங்கு செல்ல பொது வழித்தடம் இல்லை. ஆனால், இங்கு பட்டா வழங்கப்பட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு இடம் வழங்கிய பின், அருகில் கல்குவாரி துவங்க அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதை மறைக்கவே கோவிந்தாபுரம் ஊராட்சியில், மக்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும், ஒரு சென்ட் மட்டுமே. பாறை மீது வீடு கட்டி வாழ்வது சிரமம். அங்கிருந்து, அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாப் தொலைவில் உள்ளது. அதனால், அந்த இடம் வேண்டாம் என, தெரிவித்துள்ளோம். அதிகாரிகளின் அலட்சியத்தாலும், கவனக்குறைவினாலும், நெ.10 முத்துாரில் தேர்வு செய்த இடம் இன்று வரை பயனாளிகளுக்கு வழங்கவில்லை. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நெ.10.முத்தூர் பகுதியில் வழங்கிய இடத்தை விரைவில் அளவீடு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

c.mohanraj raj
ஆக 04, 2026 08:58

ஏன் அவரவர்கள் சொந்த செலவில் வாங்க மாட்டார்களா? அனைத்தையும் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் பிறகு அதற்குப் பிறகு எங்கே நிலாவில் இடமா