ஆண் குழந்தை கொலை நரபலியா என விசாரணை
கோவை:தண்டவாளம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், அது நரபலியா என, போலீசார் விசாரிக்கின்றனர். கோவை, போத்தனுார் ரயில்வே போலீசார், நேற்று ரோந்து சென்ற போது, இருகூர் - ராவத்துார் ரயில் தண்டவாளம் அருகே, ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் கிடந்ததை பார்த்தனர். அந்த இடத்தில் மிளகாய் பொடி, கோழி ரத்தம் உள்ளிட்டவை சிதறி கிடந்தது. குழந்தையை நரபலி கொடுத்திருக்கலாம் என, தகவல் பரவியது. சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் குழந்தை உடலை கைப்பற்றினர். போலீசார் கூறுகையில், 'குழந்தையை கொலை செய்து, தண்டவாளத்தில் வீசியதாக தெரிகிறது. அதை மறைக்க, கோழி ரத்தம், மிளகாய் பொடி உள்ளிட்டவற்றை துாவியிருக்கலாம். நரபலியாகவும் இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.