உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொழுநோய் ஒழிப்பு திட்டம் சாத்தியமா?

 தொழுநோய் ஒழிப்பு திட்டம் சாத்தியமா?

கோவை: தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, சுகாதார திட்டங்கள் செயல்படுத்துகின்றன. கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று தொழுநோய் அறிகுறி கொண்டவர்கள் கண்டறியப்படுகின்றனர். இவர்களுக்கு பாதிப்பின் தன்மைக்கேற்ப, கூட்டு மருந்து வழங்குதல், உடல் உறுப்புகளின் செயலிழப்பு சதவீதத்திற்கு ஏற்ப அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தொழுநோயாளி, அவர் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தொடர் மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 415 சுகாதார மேற்பார்வையாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டது. இதில், 230 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், சுகாதார திட்ட வேலைகளை சீக்கிரம் செய்வதில் சிக்கல் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் மணிவண்ணன் கூறுகையில், '' சுகாதார ஆய்வாளர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். காலியிடங்களை நிரப்பாமல், இலக்கு நிர்ணயிப்பதன் மூலம் மட்டும் முழுவீச்சில் வேலை பார்க்க முடியாது,'' என்றார்.

கோவையில் ஆண்டுதோறும் நுாறு புதிய தொழுநோயாளிகள்

மாநில அளவில், 2,500க்கு மேற்பட்ட புதிய தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவையில் ஆண்டுதோறும் 100 பேர் புதிய தொழுநோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். தொடர் மருத்துவ கண்காணிப்பில், 1,200 பேர் வரை உள்ளனர். தீவிர பாதிப்பு கொண்ட தொழுநோயாளிகளுக்கு, அரசு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்குகிறது. மாநிலம் முழுக்க, 10,200 பேருக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !