பெண்களுக்கு மெமோகிராம் பரிசோதனை; மார்பக புற்றுநோய் தடுக்க விழிப்புணர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், கடந்த ஓராண்டில், 1,200 பெண்களுக்கு 'மெமோகிராம்' பரிசோதனை செய்து, 20 பேருக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில், மருத்துவ பணிகள் துறை சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கோவை கங்கா மருத்துவமனை மற்றும் கோவை ரோட்டரி மெட்ரோ பாலீஸ் சார்பில், 50 பெண்களுக்கு 'மெமோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மார்பக புற்றுநோய் பாதிப்பை, மெமோகிராம் பரிசோதனை வாயிலாக ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும். அதன் வாயிலாக, முறையாக சிகிச்சை எடுத்தால், நுாறு சதவீதம் நோயில் இருந்து குணமாகலாம். அதேநேரம், நோய் பாதிப்பு முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால், குணப்படுத்த முடியாது.எனவே, பெண்கள் தங்களது சுய பரிசோதனை வாயிலாக கண்டுபிடிக்க முடியாத, ஆரம்ப நிலை கட்டிகளை கூட, மெமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனையாகும்.பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், கடந்த ஓராண்டில், 1,200 பெண்களுக்கு 'மெமோகிராம்' பரிசோதனை செய்து, 20 பேருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு, முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, என, தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மகப்பேறு தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.